மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஜோதிட பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம். 
தமிழ்நாடு செய்திகள்

மண்டைக்காடு கோவிலில் செய்த பரிகார பூஜைகள் ஏற்கப்பட்டதா?: ஜோதிட பிரசன்னத்தில் அதிர்ச்சி தகவல்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பின் செய்த பரிகார பூஜைகள் அம்மனால் ஏற்றுக் கொள்ளப்பட்டதா? என ஜோதிட பிரசன்னம் பார்த்ததில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

மாலை மலர்

மணவாளக்குறிச்சி :

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் கடந்த ஜூன் மாதம் 2- ந் தேதி திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கோவில் கருவறை மேற்கூரை முழுவதும் எரிந்து சேதமடைந்தது. உடனே தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் கோவிலுக்கு வந்து ஆய்வு செய்து திருப்பணி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்காக ரூ.1.08 கோடி ஒதுக்கீடு செய்து கடந்த மாதம் 24-ந் தேதி தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சரால் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

அன்றைய தினம் இந்து இயக்கங்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மண்டைக்காடு கோவிலில் பார்க்கப்பட்ட தேவபிரசன்னம் மற்றும் வாஸ்தின் படி கோவிலை விரிவாக்கம் செய்து திருப்பணிகள் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து 5 நாட்கள் கழித்து கோவில் தந்திரி தலைமையில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது. அதில் பரிகாரங்கள் முறையாக செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

உடனே இந்த பணிகளை கவனிக்க அனைத்து இந்து இயக்கங்களின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து தந்திரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிவுரைப்படி நேற்று கோவில் தந்திரி சங்கரநாராயணஅய்யர் தலைமையில் கோவிலில் இதுவரை செய்த பரிகாரங்கள் அம்மனால் ஏற்றுக் கொள்ளப்பட்டதா? என திருவனந்தபுரம் ஜோதிடர் கண்ணன் நாயரை வைத்து ஒழிவு பார்க்கும் (ஜோதிட பிரசன்னம்) நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் கல்பக மங்கலம் மாத்தூர் மடம் சஜித் சங்கர நாராயணரூ, இனி வரும் பரிகாரங்களை செய்ய தேர்வு செய்யப்பட்டார்.

ஜோதிட பிரசன்னத்தில் கூறப்பட்டதாவது:-

அம்மனின் கோபம் தணியவில்லை. இப்போதும் கோவிலில் முறையாக பூஜைகள் நடக்கவில்லை. பணத்திற்காக எதுவும் செய்யும் நிலை உள்ளது. அம்மனுக்கு முன்பு இருக்கும் குருவிற்கு (சமாதிக்கு) பூஜைகள் முறையாக செய்யவில்லை. பரிகாரங்களும் செய்யவில்லை. அம்மனுக்கு ஏற்பட்ட தீக்காயத்திற்கு மருந்திடாமல் வெளியில் பரிகாரங்கள் செய்யப்பட்டுள்ளது. இதை அம்மன் ஏற்கவில்லை. ஆகவே அம்மன் மீது ஏற்பட்ட காயங்களை ஆராய்ந்து சுத்தமான சந்தனத்தை அரைத்து பூச வேண்டும். இதை உடனடியாக செய்யாவிட்டால் ஊருக்கும், நாட்டிற்கும் பெரிய கெடுதல் ஏற்பட நேரிடும்.

கோவிலை விரிவாக்கம் செய்து தான் திருப்பணியை தொடங்க வேண்டும். கோவிலில் இருந்த உடைவாள் போன்ற பொருட்கள் திருடு போயுள்ளது. அம்மன் புற்றில் நல்லபாம்பு குடி கொண்டுள்ளது. இது வந்து செல்ல மேற்கு பகுதியில் தனிவழி உள்ளது. இந்த கோவிலில் காலம் காலமாக ஆசார அனுஷ்டானங்களுடன் நடந்து வந்த பூஜைகளை முறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டது.