தமிழக செய்திகள்

மீண்டும் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து: தவெக அமைதி காப்பது எதனால்? - கனிமொழி கேள்வி

'இனி அவ்வாறு நடக்காது' என்று கூறிய தவெக அரசு, தற்போது கண்டும் காணாமல் அமைதி காப்பது எதனால்?’

தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள தவெக அரசின் அமைச்சரவை விரிவாக்க விழா இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்விலும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக விஜய் முதலமைச்சராக பதவியேற்ற அன்று முதலில் வந்தே மாதரம், இரண்டாவதாக தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழு, இனிவரும் நிகழ்வுகளில் இதுபோல நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார்.

ஆனால் இன்றும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போதும் தவெக அமைதி காப்பது எதனால்? என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,

“இரண்டாவது முறையாக தவெக அரசின் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதிக்கும் வகையில் மூன்றாவதாகப் பாடப்பட்டிருக்கும் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

சென்ற முறை இதேபோல், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்காமல் அவமதிக்கப்பட்ட போது, 'இனி அவ்வாறு நடக்காது' என்று கூறிய தவெக அரசு, தற்போது கண்டும் காணாமல் அமைதி காப்பது எதனால்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT