தமிழக செய்திகள்

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: சட்டப்பேரவை தீர்மானத்திற்கு கமல்ஹாசன் வரவேற்பு!

மாநிலத்தின் எந்தவொரு அரசு, கல்வி அல்லது பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளாக இருந்தாலும், நிகழ்வின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில், ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடல் கட்டாயம் முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அரசினர் தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

கட்டாய முன்னுரிமை

மாநிலத்தின் எந்தவொரு அரசு, கல்வி அல்லது பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளாக இருந்தாலும், நிகழ்வின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் தன்னாட்சி மற்றும் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

1891-இல் மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய பாடல் வரிகள், 1970 முதல் அரசு விழாக்களின் தொடக்கப் பாடலாகவும், 2021 முதல் மாநிலப் பாடலாகவும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் எம்.பி. வரவேற்பு

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தனித்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து, மக்கள் நீதி மய்யம் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சிக்குரியது, வரவேற்கத்தக்கது. மாநில உரிமைகளை விட்டுத்தராத இந்தப் போக்கு தொடர வேண்டும்." என பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற சில பொது நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்படாமல் தாமதித்துப் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் சட்டப்பூர்வமாக உறுதி செய்யவே இந்தத் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டு பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.