தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் 28 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களை கைப்பற்றியது.
விஜயின் தவெக 108 இடங்களுடன் பெரும்பான்மையின்றி தவித்த நிலையில் 20 ஆண்டுகளாக திமுக கூட்டணியை உடைத்து வெளியேறி தவெகவுக்கு தாவியது 5 இடங்கள் கொண்ட காங்கிரஸ்.
இதற்கு திமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் ஸ்டாலினை சகோதரர் என்று புகழ்ந்த ராகுல் இந்த தேர்தலில் கூட்டணியில் இடம்பெற்றபோதே ஒரே மேடையில் தோன்றவில்லை.
தேர்தலுக்கு முன்பே கூட்டணியில் இருந்து விலகும் மனப்பான்மையில் காங்கிரஸ் இருந்தததாக கூறப்படுகிறது.
ஆனால் தேர்தலில் திமுக கூட்டணியில் நின்று 5 இடங்கள் பெற்றுக்கொண்டு விஜய் பக்கம் பாய்ந்துள்ளது பச்சை சந்தர்ப்பவாதம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த சூழலில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள உத்தரப் பிரதேசத்தின் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி தலைவரும் மக்களவை எம்பியுமான அகிலேஷ் யாதவ் காங்கிரசை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
அண்மையில் மேற்கு வங்க தேர்தலில் தோற்ற மம்தா பானர்ஜியை அவர் நேரில் சென்று சந்தித்திருந்தார்.
இந்நிலையில் மம்தா பானர்ஜியை சந்தித்த புகைப்படத்தையும், முதல்வர் ஸ்டாலின் உடன் இருக்கும் பழைய புகைப்படத்தையும் பகிர்ந்து அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “இக்கட்டான நேரங்களில் ஒருவரை ஒருவர் கைவிடுபவர்கள் நாங்கள் அல்ல” என்று காங்கிரசை மறைமுகமாக சாடியுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.