விபத்தில் நொறுங்கிய வேன், லாரி. 
தமிழக செய்திகள்

தோல் தொழிற்சாலை வேன்-லாரி மீது மோதி பெண் தொழிலாளர்கள் உட்பட 4 பேர் பலி

அதிகமாக பெண் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்தில் சிக்கி 4 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கன்னிகாபுரத்தில் தனியார் தோல் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஏராளமான பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

ஆம்பூர் வாணியம்பாடி சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களை வேன் மூலம் வேலைக்கு அழைத்து வருகின்றனர்.

வாணியம்பாடி பகுதியில் உள்ள கிராமங்களில் பெண் தொழிலாளர்களை ஏற்றி கொண்டு இன்று காலை வேன் ஒன்று தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தது.

வேனை டிரைவர் ராமன் என்பவர் ஓட்டி சென்றார். அதில் 25-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் இருந்தனர்.

ஆம்பூர் அடுத்த சோலூர் மேம்பாலம் அருகே பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து வேன் தறிகெட்டு ஓடியது.

சாலை நடுவில் உள்ள தடுப்புகளில் மோதி தேசிய நெடுஞ்சாலையில் எதிர்திசையில் பாய்ந்தது. அந்த நேரத்தில் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சிமெண்ட் ஏற்றி வந்த லாரி மீது வேன் மோதியது. இதில் வேன் முழுவதும் நொறுங்கியது.

டிரைவர் ராமன் மற்றும் 3 பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பலியானவர்களின் உடல்கள் ரோட்டில் சிதறி கிடந்தது. மேலும் பலர் காயமடைந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய பெண் தொழிலாளர்கள் அலறி கூச்சலிட்டனர்.

இந்த விபத்து காரணமாக சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கிருந்த பொதுமக்கள் வேனில் சிக்கிய பெண் தொழிலாளர்களை மீட்டு முதலுதவி அளித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டு காயம் அடைந்த பெண் தொழிலாளர்களை ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போதுமான ஆம்புலன்சுகள் இல்லாததால் தேசிய நெடுஞ்சாலையில் வந்த ஒரு லாரியை மடக்கி அதில் காயமடைந்த பெண் தொழிலாளர்களை ஏற்றினர்.

பின்னர் லாரி மூலம் காயம் அடைந்த தொழிலாளர்களை ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் பலியான வேன் டிரைவர் மற்றும் 3 பெண் தொழிலாளர்கள் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்கள் பெயர் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக 30 நிமிடத்திற்கு மேலாக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து குறித்த பெண் தொழிலாளர்களின் உறவினர்கள் ஏராளமானோர் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.

தொழிற்சாலைக்கு சொந்தமான வேனில் அளவுக்கு அதிகமாக தொழிலாளர்களை ஏற்றிச் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் அடிக்கடி விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது.

அதில் தொழிற்சாலை வாகனங்களில் அளவுக்கு அதிகமாக எந்தக் காரணத்தை கொண்டும் தொழிலாளர்களை ஏற்றி செல்லக்கூடாது. அதன்மூலம் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அதிகமாக பெண் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்தில் சிக்கி 4 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.