திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களை கட்ட தொடங்கி உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 15 பேரூராட்சிகள் என மாவட்டத்தில் 440 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க 11.32 லட்சம் வாக்காளர்கள் தயாராகி விட்டனர். இதில் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். இதனால் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. 3 லட்சத்து 62 ஆயிரத்து 353 ஆண்கள்,3 லட்சத்து 50 ஆயிரத்து 247 பெண்கள், 170 திருநங்கையர் என 7.12 லட்சம் வாக்காளர்கள் மாநகராட்சி தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். உடுமலை நகராட்சியில் 33 வார்டுகள், தாராபுரம் 30, திருமுருகன்பூண்டி 27, வெள்ளகோவில் 21, பல்லடம் மற்றும் காங்கயம் நகராட்சிகளில் தலா 18 வார்டுகள் என 6 நகராட்சிகளில் 147 வார்டுகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. 6 நகராட்சிகளில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 998 ஆண்கள், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 364 பெண்கள், 21 திருநங்கைகள் என 2 லட்சத்து 45 ஆயிரத்து 383 வாக்காளர்கள் உள்ளனர்.
அவிநாசி, கொளத்துப்பாளையம், மடத்துக்குளம் பேரூராட்சியில் தலா 18 வார்டுகள் உள்ளன. தளி பேரூராட்சியில் 17 வார்டுகளும், கன்னிவாடியில் 12 வார்டுகளும் உள்ளன. மற்ற 10 பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகள் உள்ளன. பேரூராட்சிகளில் மொத்தம் 84 ஆயிரத்து 827 ஆண்கள், 89 ஆயிரத்து 384 பெண்கள், 8 திருநங்கைகள் என ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 219 வாக்காளர்கள் உள்ளனர்.
நகர உள்ளாட்சிகள் அளவில் 5 லட்சத்து 66 ஆயிரத்து 178 ஆண்கள், 5 லட்சத்து 65 ஆயிரத்து 995 பெண்கள், 199 திருநங்கைகள் என 11 லட்சத்து 32 ஆயிரத்து 372 வாக்காளர்கள் வாக்காளிக்க தகுதி உடையவர்களாக உள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சியில் ஆண்களை காட்டிலும், பெண் வாக்காளர்கள் குறைவாக உள்ளனர். 6 நகராட்சிகளிலும் ஆண்களை காட்டிலும், பெண் வாக்காளரே பெரும்பான்மையாக உள்ளனர். மற்றபடி 15 பேரூராட்சிகளிலும் ஆண்களை காட்டிலும் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். மாநகராட்சியின் 60 வார்டுகள் நீங்கலாக மற்ற 380 வார்டுகளில் பெண் வாக்காளரே வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர்.