திருச்சி:
திருச்சியை சேர்ந்த தி.மு.க. அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழில்அதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலை வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி கல்லணை ரோட்டில் பொன்னிடெல்டா பகுதியில் காவிரி ஆற்று கரையோரம் வீசப்பட்டு கிடந்தது.
ராமஜெயத்தின் கை, கால்கள் கட்டுக்கம்பி மற்றும் பார்சல் கட்டும் டேப்பால் இணைத்து கட்டப்பட்டு, வாயில் துணியை திணித்து கொடூரமான முறையில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் அப்போதைய மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கமிஷனர் உத்தரவின்பேரில் கொலையாளிகளை பிடிக்க 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார்கள்.
ஆனால் கொலையாளிகள் குறித்து எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. பின்னர் 4 மாதங்களுக்கு பிறகு ராமஜெயம் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. அப்போதைய சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு மலைச்சாமி விசாரணை நடத்தினார். முதல்கட்டமாக ராமஜெயம் நடைபயிற்சி சென்ற இடத்தில் இருந்து அவரது உடல் கிடந்த இடம் வரை உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டும், ராமஜெயத்தின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு தரப்பில் விசாரணை நடத்தப்பட்டது.
திருச்சி மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த பிரபல ரவுடிகளிடமும் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. அதன்பிறகு சி.பி.சி.ஐ.டி. போலீசார் ராமஜெயத்துக்கு நெருக்கமான 2 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினார்கள். ஆனாலும் வழக்கில் முன்னேற்றம் இன்றி கிணற்றில் போட்ட கல்லாக கிடந்தது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குபின்னரும், வழக்கில் முடிவு தெரியாததால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று ராமஜெயத்தின் மனைவி லதா கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு விசாரணை சரியான கோணத்தில் செல்வதாகவும், கொலையாளிகளை நெருங்கி விட்டதாகவும், கூடிய விரைவில் பிடிபடுவார்கள் எனக்கூறி காலஅவகாசம் கேட்டனர். இவ்வாறு ஒவ்வொரு முறையும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.சி.ஐ.டி.தரப்பில் காலஅவகாசம் கேட்கப்பட்டது. பலமுறை அவகாசம் கேட்டும், கொலையாளிகள் யார்?, கொலைக்கான நோக்கம் என்ன? எதையுமே கண்டுபிடிக்க முடியவில்லை.
அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கு குறித்து சட்டசபையில் பேசும்போது, ராமஜெயத்துக்கு தனிப்பட்ட முறையிலும், தொழில்ரீதியாகவும் பல விரோதிகள் இருந்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 1,100 பேருக்கும் மேல் விசாரணை நடத்தப்பட்டுள்ளன. 2,910 செல்போன் எண்களும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்துக்குட்பட்ட 294 வாகனங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூடுதல் விவரங்களை அளித்தால் அவை விசாரணை செய்யப்படும் என்றார்.
இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. மேலும், 3 மாதத்தில் சி.பி.ஐ. விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. அதன்பிறகு சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை நடத்திய விசாரணை அறிக்கை அனைத்தும் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கை சி.பி.ஐ. கையில் எடுத்ததும் சில மாதங்களில் குற்றவாளிகள் சிக்கி விடுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் சி.பி.ஐ. தரப்பில் 4 ஆண்டுகள் மேற்கொண்ட விசாரணையிலும் முடிவு தெரியவில்லை. இதனால் ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன், சி.பி.ஐ. விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆகவே இந்த வழக்கை மீண்டும் தமிழக போலீசாரிடமே ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இது குறித்து காவல்துறையிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது வழக்கு விசாரணைக்கு தமிழக காவல்துறை முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பாரதிதாசன், ராமஜெயம் கொலை வழக்கை கோர்ட்டு கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து விசாரிக்கலாம் என்றும், சிறப்பு புலனாய்வுக்குழுவில் இடம் பெறும் போலீசாரின் பட்டியலை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதன்படி தமிழக அரசு அதிகாரிகளின் பெயர் பட்டியலை கோர்ட்டில் வழங்கியது.
அதனை ஏற்று கொண்டு நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார், அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மதன், சி.பி.ஐ. துணை சூப்பிரண்டு ரவி ஆகியோர் இந்த சிறப்பு புலனாய்வுக்குழுவில் இடம் பெற்று இருப்பார்கள் என்றும், சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஷகீல்அக்தர் சிறப்பு புலனாய்வுக்குழுவை மேற்பார்வை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த குழுவினர் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வழக்கு விசாரணை முடியும் வரை சிறப்பு புலனாய்வுக்குழுவினருக்கு வேறு அலுவல்கள் ஒதுக்கக்கூடாது என்றும், இந்த குழுவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து தர வேண்டும் என்றும், இந்த சிறப்பு புலனாய்வுக்குழு பிப்ரவரி 21-ந் தேதி முதலே விசாரணையை தொடங்கினால் நல்லது என்றும், அடுத்தக்கட்ட விசாரணையை மார்ச் 7-ந் தேதிக்கு ஒத்தி வைத்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதுகுறித்து காவல்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கோர்ட்டு உத்தரவுப்படி, சிறப்பு புலனாய்வுக்குழுவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை போன்ற காரணங்களால் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது முடிந்துவிட்டதால், அடுத்த ஓரிரு நாட்களில் டி.ஜி.பி. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் வழங்கப்படும் ஆலோசனைகளுக்கு பிறகே முழுவீச்சில் விசாரணை தொடங்கும். இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கைகளை ஆய்வு செய்வதுடன், புதிய கோணத்திலும் விசாரணை தொடங்கும் என்றார்.
ராமஜெயம் கொலை வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கோர்ட்டு கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கு தற்போது மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. சவால் நிறைந்த இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வுக்குழுவின் விசாரணையில் 10 ஆண்டுகால சவால் நிறைந்த வழக்கில் தீர்வு கிடைக்குமா? என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து உள்ளனர்.