திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் தேவாலயங்களுக்கோ அல்லது கோவில்களுக்கோ அல்லது அனுமதிக்கப்பட்ட பொழுதுபோக்கு தலங்களுக்கோ தங்கள் குடும்பங்களுடன் செல்ல நேர்ந்தால் தங்கள் வீடுகளை பூட்டிச் செல்வதுடன் அதுபற்றிய தகவல்களை தங்கள் பகுதி போலீஸ் நிலையங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
பண்டிகை தினங்களை முன்னிட்டு இன்று (24-ந் தேதி), நாளை மற்றும் (31-ந் தேதி) ஆகிய 3 நாட்களும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் இரவு ரோந்தில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மாவட்டத்தின் முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் முக்கிய இடங்களில் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் அதிவேகமாக வாகனங்களை செலுத்துபவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
இளைஞர்கள் அதிவேகமாக வாகனங்களை செலுத்தி பந்தயங்களில் ஈடுபடுவதும், வாகன சாகசங்களில் ஈடுபடுவதும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மாவட்டத்தில் இதுபோன்று வாகன பந்தயங்களில் ஈடுபடுவோர் மீதும், இரு சக்கர வாகன சாகசங்களில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொழுது போக்கு தலங்கள் மற்றும் விடுதிகளில் உள்ள உரிமையாளர்கள் கோவிட் மற்றும் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு அறிவுறுத்தி உள்ள வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். மீறுபவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உரிய அனுமதி பெற்ற பின்பே கேளிக்கை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அவையும் அனுமதிக்கப்பட்ட நேரம் தூண்டி நடைபெறக் கூடாது.
பண்டிகை தினங்களை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தங்கள் பகுதிகளில் செயல்படும் பொழுது போக்கு தலங்கள் மற்றும் விடுதிகள் மேற்கூறிய விதிமுறைகளை மீறினால் அது குறித்தும், மதுபோதையில் வாகனத்தை செலுத்துதல் மற்றும் வாகன சாகசங்களில் ஈடுபடுதல் போன்ற இளைஞர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் பிரத்யேக எண்.63799 04848 -க்கு எவ்வித தயக்கமின்றி தொலைபேசி, வாட்ஸ் அப் வாயிலாக தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விபரம் ரகசியமாக வைத்து பாதுகாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.