கைது 
தமிழ்நாடு செய்திகள்

தோட்டத்தில் மறைத்து வைத்திருந்த 3 நாட்டு துப்பாக்கிகள் கண்டுபிடிப்பு- 2 பேர் கைது

வாழப்பாடி அருகே தோட்டத்தில் மறைத்து வைத்திருந்த 3 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார் வாலிபர் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

மாலை மலர்

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் அருநூற்றுமலை அருகே உள்ள ஆலடிப்பட்டி கிராமத்தில் காரிப்பட்டி போலீசார் கள்ளச்சாராய தடுப்பு சோதனை நடத்தினர். அப்போது சிறுமலை, கோவில் காடு பகுதியை சேர்ந்த விவசாயி குமார் (வயது 46) என்பவர் போலீசாரை கண்டதும் ஓடினார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை மடக்கி பிடித்தனர். அவரது தோட்டத்தில் சோதனை செய்ததில் அங்குள்ள கொட்டகையில் உரிமம் இல்லாத 2 நாட்டு துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 2 துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் குப்பனூர் கிராமம் வெள்ளியம்பட்டியை சேர்ந்த அர்ஜுனன் (28) என்பவர் பதுக்கி வைத்திருந்த உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.