கோவை:
கோவை ரத்தினபுரி ரங்கண்ணா கவுண்டர் நகரை சேர்ந்தவர் சந்திரமோகன்(வயது60). இவர் தண்டு மாரியம்மன் கோவில் அருகே பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைநடத்தி வருகிறார். இவரது மனைவி செல்வராணி(57).
சந்திரமோகன் கடையில் இல்லாத நேரங்களில் செல்வராணி தான் கடையில் இருந்து வியாபாரத்தை கவனித்து கொள்வார்.
சம்பவத்தன்று செல்வராணி கடையில் இருந்தார். அப்போது ஒரு பெண் கடைக்கு வந்தார். அவர் செல்வராணியிடம், பிறந்த நாள் பரிசு பொருட்கள் வேண்டும் எனவும், எடுத்துக் காட்டுமாறும் கூறினார்.
செல்வராணியும் ஒவ்வொரு பொருட்களாக எடுத்து காட்டினார். அப்போது அந்த ஒரு பொருளை எடுத்து காட்டி இதனை பேக்கிங் செய்து தருமாறு கூறினார்.
இதையடுத்து அவர் பொருளை பேக்கிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் பொருளை பார்ப்பது போன்று செல்வராணியின் அருகே சென்றார். அவரும், பொருளை பார்க்கதான் அருகே வருகிறார் என நினைத்து நின்றார்.
அருகில் வந்த சிறிது நேரத்தில் அந்த பெண், தான் மறைத்து வைத்திருந்த கரப்பான் பூச்சி ஸ்பிரேயை எடுத்து செல்வராணியின் முகத்தில் அடித்தார். இதனால் நிலைதடுமாறிய செல்வராணி கீழே விழுந்தார்.
இதை பயன்படுத்திய அந்த பெண், அவர் கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் நகையை பறித்து கொண்டு ஓட முயற்சித்தார்.
செல்வராணி கண்ணை திறக்க முடியாமல் அவதிப்பட்டாலும், பெண்ணின் காலை கெட்டியாக பிடித்து கொண்டு அவரை அங்கிருந்து நகர விடாமல் காப்பாற்றுங்கள், காப்பற்றுங்கள் என சத்தம் போட்டார்.
அப்போது கடையிலும், அருகிலும் யாரும் இல்லாததால் அவரது சத்தம் கேட்டு யாரும் வரவில்லை. மாட்டிக்கொள்வோம் என பயந்த அந்த பெண், செல்வ ராணியை எச்சரித்து தாக்கி விட்டு வெளியில் ஓடினார்.
சுதாரித்து எழுந்த செல்வராணி, வெளியில் ஓடி வந்து, நகையை பறித்து சென்ற பெண்ணை துரத்தினார். அப்போது நகையை பறித்து விட்டு ஓடுகிறாள். அவளை பிடிங்கள் என சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் உதவிக்கு வந்து அந்த பெண்ணை மடக்கி பிடித்து ரத்தினபுரி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அந்த பெண் மதுரை மாவட்டம் மேலூர் ஆட்டுக்குளத்தை சேர்ந்த தவமணி(36) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த நகையை பறிமுதல் செய்தனர். தாக்குதல் மற்றும் நகை பறிப்பு காட்சி கடையில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைதான தவமணி போலீசாரிடம், நான் இந்த கடையில் கண்காணிப்பு காமிரா இருக்காது. கடையில் யாரும் இல்லை என்பதால் மூதாட்டியை தாக்கி நகையை பறித்தேன். ஆனால் அவர் என்னை விடாமல் ஆடையை பிடித்து இழுத்தார். தப்பியோடிய போது அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மடக்கி பிடித்து விட்டதாக தெரிவித்தார்.
தொடர்ந்து இவர் வேறு எங்காவது இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா? என்பதும் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.