தமிழக செய்திகள்

கொலை செய்யப்பட்ட மாணவி தந்தை மரணத்தில் திடீர் திருப்பம்

மகள் இறந்த சோகத்தில் இருந்த மாணவியின் தந்தையும் மரணமடைந்துள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஒரே நாளில் தந்தை-மகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பரங்கிமலையில் மின்சார ரெயிலில் இருந்து மாணவியை தள்ளிவிட்டதில், கழுத்து துண்டாகி உயிரிழந்த சம்பவம் நேற்று சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சதீஷ் என்ற இளைஞர் மாணவியை காதலித்து வந்த நிலையில், காதலை ஏற்க மறுத்ததால் மாணவியை கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

தலைமறைவான குற்றவாளியைப் பிடிக்க ரெயில்வே போலீசார் சார்பில் டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.

பின்னர், கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்த கொலையாளி சதீஷை போலீசார் இன்று கைது செய்தனர். இந்நிலையில், மகள் இறந்த சோகத்தில் இருந்த மாணவியின் தந்தையும் மரணமடைந்துள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகள் இறந்த தகவல் அறிந்த தந்தை துக்கம் தாங்காமல் மாரடைப்பால் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் மாணவியின் தந்தை மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதில், அவர் மாரடைப்பால் இறக்கவில்லை என்றும் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளதாவும் தகவல் வெளியாகி உள்ளது.

மாணவியின் தந்தை மதுவில் விஷம் கலந்து குடித்து உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரே நாளில் தந்தை-மகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT