போலீசார் விசாரணை 
தமிழ்நாடு செய்திகள்

உடுமலையில் மாணவி கொலை- கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்

உடுமலை மாணவியின் வீடு அருகே பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் கொலையாளிகளின் உருவம் ஏதும் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மாலை மலர்

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை காந்தி சதுக்கம் பத்திரகாளியம்மன் லேஅவுட் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சண்முகராஜ். இவர் தனியார் கோழிப்பண்ணையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கற்பகவள்ளி. இவர் அனு‌ஷம்நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார். இவர்களது ஒரே மகள் ஹர்திகா (வயது17). உடுமலை பொள்ளாச்சி சாலையில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை ஹர்திகா வீட்டின் சமையல் அறையில் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரது பெற்றோர் ஹர்திகாவை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத் திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஹர்திகா உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் உடுமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஹர்திகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஹர்திகா மரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் வீட்டில் தனியாக இருக்கும்போது அங்கு வந்த மர்மநபர்கள் ஹர்திகாவை கத்தியால் கழுத்தை அறுத்துக்கொன்று விட்டு தப்பிச்சென்றது தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர், மாவட்ட எஸ்.பி., சசாங்சாய், உடுமலை டி.எஸ்.பி.தேன்மொழிவேல் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர்.

கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் உடுமலை ராஜேஷ் கண்ணா, தளி ராஜ்கண்ணு, குடிமங்கலம் சிவகுமார் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மாணவியை கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? என்பதை கண்டறிய ஹர்திகாவுடன் படித்து வந்த மாணவ, மாணவிகள், பள்ளி ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் உடுமலை பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த 15 பேர் மற்றும் மாணவியின் பெற்றோர், உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. உடுமலை பகுதியில் கஞ்சா விற்கும் கும்பலை சேர்ந்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மாணவியின் வீடு அருகே பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் கொலையாளிகளின் உருவம் ஏதும் பதிவாகி உள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கொலையாளிகள் பிடிபடும் பட்சத்தில் மாணவி கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.