மதுரை:
மதுரையை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவரது மகன் சுரேஷ் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ந் தேதி விபத்தில் சிக்கி காயமடைந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் தாய் முத்து லட்சுமி ஆஸ்பத்திரி அருகில் படுத்திருந்தார். அப்போது அவர் எலி கடித்து காயமடைந்தார்.
இதையடுத்து ஆஸ்பத்திரியில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்ற முத்துலட்சுமி, அரசு ஆஸ்பத்திரியில் மகனுடன் தங்கியிருந்த போது எலி கடித்தது குறித்து மதுரை ஐகோர்ட்டில் 2014-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
அதில் அரசு ஆஸ்பத்திரியில் எலிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு மருத்துவமனையை முறையாக பராமரிக்காததால் தான் எலிகள் கடிக்கும் நிலை உருவானது. எனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடாக ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த மனுவை நீதிபதி கார்த்திகேயன் விசாரித்தார்.
அப்போது அரசு தரப்பில், மனுதாரரை எலி கடித்தது குறித்து உடனடியாக டாக்டர்களின் கவனத்திற்கு கொண்டு வரவில்லை. அவரது காலில் எலி கடித்ததற்கான காயங்கள் இல்லை. மருத்துவமனை ஆலோசனைக்குழு அவ்வப்போது மருத்துவமனையில் சுகாதாரம் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. மனுதாரர் தவறான தகவலை தெரிவிக்கிறார் என்று கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, மருத்துவமனையின் தூய்மை மற்றும் சுகாதாரம் மருத்துவமனை நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. எதிர்பாராத விபத்து ஏற்படும்போது அதற்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. அதே போலத்தான் எலி கடித்த விவகாரத்திலும் மனுதாரர் இழப்பீடு பெற தகுதியானவர்தான். எனவே மனுதாரருக்கு இழப்பீடாக ரூ. 25 ஆயிரத்தை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.