தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மேலவெளி ஊராட்சி ரெட்டிப்பாளையம் மனோ நகரை சேர்ந்தவர் ராஜா (வயது 37). ரியல் எஸ்டேட் அதிபர்.
இது தவிர தஞ்சை பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் சொந்தமாக டீக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி கனகதுர்கா. இவர்களுக்கு ஸ்ரீவர்ஷன் (11) என்ற ஒரு மகன் உள்ளார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
ராஜா தஞ்சை நகரின் சில இடங்களில் ஏக்கர் கணக்கில் காலி இடங்களை வாங்கி அதில் பிளாட் போட்டு அதனை விற்று வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழிலுக்காக வங்கி மற்றும் ஒரு சில நபர்களிடம் கடன் வாங்கி இருந்தாராம்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வாங்கிய இடத்தை பதிவு செய்வதற்காக பதிவு அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அங்கு கூடுதலாக பணம் கேட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்து வந்த ராஜா பதிவு செய்வதற்கு கூடுதல் பணம் தேவைப்பட்டதால் செய்வதறியாது தவித்து வந்துள்ளார். இதனால் அவர் மன உளைச்சலுக்கும் ஆளானதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடனை கொடுத்தவர்கள் ராஜாவுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் ஒருபுறம் கடன், மறுபுறம் கூடுதல் பணம் கேட்டது என்று நெருக்கடியில் சிக்கி தவித்தார். ரியஸ் எஸ்டேட் தொழிலிலும் வருமானம் இல்லை. டீக்கடையிலும் போதிய வருமானம் இல்லாததால் என்ன செய்வதென்றே தெரியாமல் ராஜா தவித்தார்.
கடன் பிரச்சினையால் வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு ராஜா வந்தார்.
இது குறித்து மனைவி கனகதுர்காவிடம் பேசினார். அவரும் இதற்கு சம்மதித்தார். மேலும் நமது மகன் தனியாக கஷ்டப்படக் கூடாது. அவனையும் நாம் செல்லும் இடத்துக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றார்.
அதன்படி நேற்று இரவு ராஜா, கனகதுர்கா இருவரும் சேர்ந்து மனதை கல்லாக்கி கொண்டு தூங்கி கொண்டிருந்த தங்களது ஒரே மகன் ஸ்ரீவர்ஷனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
பின்னர் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் வீடு கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் சென்று ஜன்னலை திறந்து பார்த்துள்ளனர்.
அதில் ஸ்ரீவர்ஷன் இறந்து கிடந்ததையும், ராஜா, கனகதுர்கா தூக்கில் பிணமாக கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக கள்ளப்பெரம்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கதவை உடைத்து சென்றனர். இதையடுத்து 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து போன ராஜா கடிதம் எழுதி வைத்துள்ளாரா என்று போலீசார் வீட்டை சோதனையிட்டனர். மேலும் கந்துவட்டி கும்பல் மிரட்டியதா எனவும், வேறு ஏதேனும் காரணமா எனவும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்ற ஒரே மகனை கொலை செய்து விட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சை பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.