சென்னை:
திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் கோயிலில் சுவாமியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கோயில் சார்பில் நவீன இயந்திரம் மூலம் தயார் செய்யப்பட்ட தரமான குங்குமம், திருநீறு பிரசாதம் வழங்குவதற்கான திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்கள்.
அப்போது நிருபர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது கோயில்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்குத் தரமான திருநீறு மற்றும் குங்குமப் பிரசாதம் வழங்குவதற்காக 8 கோயில்களில் தயாரித்து, பிற கோயில்களுக்கு வழங்கிட ரூ.3 கோடி செலவில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு முதல்-அமைச்சர் உத்தரவிற்கேற்ப வெளியிடப்பட்டது.
அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக பழநி, தண்டாயுதபாணி சுவாமி கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களில் நவீன இயந்திரங்கள் மூலம் தரமான விபூதி தயார் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் நவீன இயந்திரங்கள் மூலம் தரமான குங்குமம் தயார் செய்யப்பட்டு பிற கோயிலுக்கு வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் கோயில்களுக்கு பிரித்து அனுப்பப்படும் பணியை மேற்கொண்டுள்ளோம்,
இந்து சமய அறநிலையத்துறையில் அறிவிக்கப்பட்ட மானியக்கோரிக்கையின் அறிவிப்புகளை ஒன்றொன்றாக நிறைவேற்றுவதில் உள்ளபடியே துறை சார்ந்த அலுவலர்களுக்கு குறிப்பாக செயலாளர்கள், ஆணையாளர்கள், இணை ஆணையாளர்களுக்கு துறை அமைச்சர் என்ற சார்பில் என்னுடைய நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குன்றத்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வருகின்ற 25-ந் தேதி குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வருகின்ற பக்தர்களுக்கு வாகனங்கள் நிறுத்துகின்ற இடம், கூடுகின்ற பக்தர்களுக்கு போதிய அளவு பாதுகாப்புகள் வழங்குவது, குடிநீர், கழிப்பிட வசதி அமைப்புகளை ஏற்படுத்தி தருவது போன்றவை குறித்து ஆய்வு கூட்டத்தை நடத்த இருக்கின்றோம்.
கூட்டத்தை விரைவில் நடத்தி பக்தர்களுக்கு தேவையான வசதியை இந்து சமய அறநிலையத்துறை செய்து தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் முதன்மைச் செயலர் டாக்டர் சந்திரமோகன் ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், உயர் மட்ட குழு உறுப்பினர் தேசமங்கையர்கரசி, திருவேற்காடு கோயில் இணை ஆணையாளர் லெட்சுமன் மற்றும் இணை ஆணையாளர்கள் ஜெயராமன், பரஞ்ஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.