பொன்னேரி:
பொன்னேரியில் உள்ள உலகநாதன் நாராயணசாமி அரசினர் கலைக்கல்லூரியில், சென்னை அம்பத்தூரை சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஆங்கில உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரிடம் செல்போனில் பேசும்போது இரட்டை அர்த்தத்தில் நட்பை வளர்த்துக் கொள்ள வீட்டிற்கு வருமாறு கூறினார். இதற்கு பதில் அளிக்கும் மாணவி எதற்காக நான் உங்கள் வீட்டிற்கு வர வேண்டும். உங்கள் நட்பு தேவை இல்லை என்று கூறுகிறார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவியும் இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் புகார் செய்தார்.
இந்த நிலையில் பொன்னேரி போலீசார் நேரடியாக கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் மாணவிக்கு பேராசிரியர் மகேந்திரன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும், அவர் எழுதிய புத்தகங்களை வாங்குமாறு மாணவ-மாணவிகளுக்கு நெருக்கடி கொடுத்து வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து பேராசிரியர் மகேந்திரனை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அப்போது கல்லூரி நுழைவு வாயில் முன்பாக வாகனத்தை வழிமறித்த மாணவர்கள் பேராசிரியர் மகேந்திரனை தாக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் மாணவர்களை போலீசார் சமாதானம் செய்து கலைந்து போகச்செய்தனர். இதைத்தொடர்ந்து பேராசிரியிர் மகேந்திரனை போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து பேராசிரியர் மகேந்திரன் மீது பெண் வன்கொடுமை, மானபங்கம் படுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நேற்று இரவே பொன்னேரி கிளைச்சிறையில் அடைத்தனர். கைதான பேராசிரியர் மகேந்திரனின் மனைவி, மகள் ஆகியோர் டாக்டர்களாக உள்ளனர். அவரது மகன் என்ஜினீயராக உள்ளார்.
மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மகேந்திரன் தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது.
அவர் வகுப்பறையில் பாடம் எடுக்கும்போது செல்போனில் அடிக்கடி ஆபாச படங்களை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதே போல் அவர் மேலும் பல மாணவிகளிடம் ஆபாசமாக பேசி வந்துள்ளார்.
இதற்கு முன்பும் மகேந்திரன் மீது கல்லூரியில் மாணவிகள் சிலர் புகார் தெரிவித்து உள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி அவரது அத்துமீறல் நீடித்து வந்துள்ளது.
தற்போது மாணவியுடனான ஆபாச பேச்சு உரையாடல் சமூகவலை தளங்களில் பரவியதால் மகேந்திரன் சிக்கிக்கொண்டார்.
இதே போல் மாணவிகள் வேறுயாரேனும் அவரால் பாதிக்கப்பட்டு உள்ளனரா? என்று போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மீஞ்சூர்-பொன்னேரி சாலையில் அமர்ந்து உள்ளனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான நிலை நீடித்து வருகிறது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து மாணவர்கள் கூறும்போது, மாணவியிடம் தவறாக பேசிய போராசிரியர் மகேந்திரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது ஏற்கனவே புகார்கள் இருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அவருக்கு ஆதரவாக இருந்த பேராசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரி முதல்வரை மாற்ற வேண்டும்’ என்றனர். மாணவர்களின் மறியல் போராட்டத்தில் பரபரப்பான நிலை நீடித்து வருகிறது.