விசைத்தறியாளர்கள் போராட்டம் வாபஸ் 
தமிழ்நாடு செய்திகள்

திருப்பூர்-கோவையில் விசைத்தறியாளர்கள் போராட்டம் வாபஸ்

கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் திருப்பூர், கோவையில் 38 நாட்களாக நடைபெற்று வந்த விசைத்தறியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

மாலை மலர்

மங்கலம்:

திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினமும் ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

இந்தநிலையில் கடந்த 2014ல் உயர்த்தப்பட்ட கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்னும் வழங்கவில்லை. இதன் காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக விசைத்தறி தொழில் கடும் நெருக்கடியில் உள்ளது. கூலி உயர்வை அமல்படுத்தினால் மட்டுமே தொழில் செய்ய முடியும் என்ற நிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு கடந்த 24.11.2021ந்தேதி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் முன்னிலையில் பல்லடம் சோமனூர் ரகத்திற்கு 23 சதவீதம், மற்ற ரகத்திற்கு 20 சதவீதம் கூலி உயர்வு அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வை அமல்படுத்தாமல் இருந்தனர். இதனை கண்டித்தும் ஒப்பந்த கூலி உயர்வு வழங்கக்கோரியும் கடந்த ஜனவரி மாதம் 9ந்தேதி முதல் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கண்டன ஆர்ப்பாட்டம், முதல்வருக்கு தபால் அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களையும் விசைத்தறியாளர்கள் நடத்தினர். இதனால் ரூ.3500 கோடி அளவுக்கு காடாத்துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது. தொழிலாளர்களும் வேலையிழந்து தவித்து வந்தனர்.

இந்தநிலையில் இன்று தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் விசைத்தறியாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் இடையே கூலி உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பல்லடம் ரகத்திற்கு 15 சதவீதம், மற்ற ரகங்களுக்கு 19 சதவீதம் கூலி உயர்வு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதற்கு 2 தரப்பினர் இடையேயும் உடன்பாடு ஏற்பட்டது. மேலும் தொழில் நிலைமை சீரானவுடன் 4 மாதங்களுக்கு பிறகு மீதி உள்ள கூலி பல்லடம் ரகத்திற்கு 5 சதவீதம், மற்ற ரகத்திற்கு 4 சதவீதம் வழங்குவது குறித்து இரு தரப்பும் பேசி உறுதி செய்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

பேச்சுவார்த்தையில் பல்லடம், மங்கலம், வேலம் பாளையம், கண்ணம்பாளையம், அவினாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமா நல்லூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்களும், பல்லடம், சோமனூர், அவிநாசி, திருப்பூரை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்களும் பங்கேற்றனர். கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் திருப்பூர், கோவையில் 38 நாட்களாக நடைபெற்று வந்த விசைத்தறியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.