திண்டுக்கல்:
திண்டுக்கல் ஜி.டி.என். சாலை திருநகரைச் சேர்ந்தவர் மணிமாறன் (வயது 50). இவர் தலைமை தபால் அலுவலகத்தில் உதவி தபால் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு பிரேமலதா என்ற மனைவியும், அரவிந்த் என்ற மகனும் உள்ளனர்.
அரவிந்துக்கு கடந்த 1 வருடத்துக்கு முன் திருமணம் நடந்ததால் மனைவியுடன் நந்தவனப்பட்டியில் வசித்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அரவிந்த் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனால் குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக மணிமாறனும் அவரது மனைவியும் மகன் வீட்டிலேயே தங்கியுள்ளனர். அவ்வப்போது வீட்டுக்கு வந்து சுத்தம் செய்து விட்டு பின்னர் சென்று விடுவது வழக்கம்.
இன்று காலையில் மணிமாறன் வீட்டில் இருந்து புகை மூட்டம் வரவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மணிமாறன் மற்றும் அவரது மகன் அரவிந்த் வீட்டுக்கு வந்து பார்த்துள்ளனர்.
அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வீட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். அதன் பின்னர் பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 25 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து நகர் வடக்கு போலீசாருக்கு மணிமாறன் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
கொள்ளையர்கள் பைப் வழியாக வீட்டுக்குள் இறங்கி கதவை உடைத்து பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மேலும் கொள்ளையர்கள் தடயங்களை அழிக்கும் முயற்சியாக மேஜை, நாற்காலி, பீரோ, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை தீ வைத்து எரித்துள்ளனர்.
இதில் பீரோவில் இருந்த பட்டுச் சேலைகள், முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் ஆகியவையும் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் நெருக்கடியான தெருவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டும், தடயவியல் நிபுணர்களைக் கொண்டும் சோதனை நடத்தப்பட்டது.
கொள்ளை நடந்த இடத்துக்கு அருகே ஒரு செல்போன் கேட்பாரற்று கிடந்தது. அந்த செல்போன் கொள்ளையர் பயன்படுத்தியதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.