திருவள்ளூரில் ஒரு குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் காட்சி 
தமிழ்நாடு செய்திகள்

திருவள்ளூர்-காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2,171 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

திருவள்ளூர் நகராட்சியில் மட்டும் 25 போலியோ சொட்டு மருந்து மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரம் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் 135 பேர் ஈடுபட்டனர்.

மாலை மலர்

திருவள்ளூர்:

திருவள்ளூர்-காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் 2,171 மையங்களில் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் இன்று 1,450 மையங்களில் நடக்கிறது. இதில் 1,87,900 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாமில் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், ஏற்கனவே போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளித்திருந்தாலும் இன்று நடைபெறும் முகாமில் போலியோ சொட்டு மருந்து இலவசமாக அளிக்கப்பட்டது.

மாவட்டத்தில் மக்கள் அதிகம் நடமாடும் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் நடமாடும் சொட்டு மருந்து முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த முகாம்களில், சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட 6,058 பேர் பணியில் ஈடுபட்டனர். இதில் திருவள்ளூர் நகராட்சியில் மட்டும் 25 போலியோ சொட்டு மருந்து மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரம் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் 135 பேர் ஈடுபட்டனர்.

இன்று நடைபெறும் முகாமில் சொட்டு மருந்து செலுத்தி கொள்ளாத குழந்தைகளை கண்டறிந்து வருகிற 28-ந் தேதி வீடு வீடாக சென்று சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 721 மையங்களில் சுமார் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 934 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் சுகாதார பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் மற்றும் சுய உதவி குழுவினர் என மொத்தம் 2,818 பேர் ஈடுபட்டனர். மேலும் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தனியாக முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு வரும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

வெளி மாநிலங்களில் இருந்து கட்டுமான பணிக்காக வந்துள்ள தொழிலாளர்களின் குழந்தைகளின் எண்ணிக்கை தனியாக கணக்கிடப்பட்டு அவர்களுக்கு 12 சிறப்பு நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வரும் பயணிகளின் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இன்று காலையில் இருந்தே போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது.

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பூஞ்சேரி டோல்கேட், கடற்கரை கோயில், பட்டர்பால், ஐந்துரதம், இ.சி.ஆர் புறவழி சாலை, பேருந்து நிலையம், பேரூராட்சி அலுவலகம் போன்ற பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்தப்பட்டது.

இன்று காலையில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வந்திருந்தனர். அவர்கள் வேறு மாநிலத்து குழந்தைகளுக்கு இங்கு மருந்து போடமாட்டார்கள் என நினைத்து முகாமிற்கு வரவில்லை. தகவல் அறிந்த மருத்துவ ஊழியர்கள் அவர்களை தேடிச்சென்று போலியோ சொட்டு மருந்து போட்டனர்.