திருமாவளவன் 
தமிழக செய்திகள்

பெகாசஸ், நீட் தேர்வு விவகாரம்: ஜனாதிபதி உரையை புறக்கணிப்பதாக திருமாவளவன் அறிவிப்பு

பிரதமர் பதவியில் நீடிப்பது இந்த நாட்டுக்கே அவமானம் ஆகும். எனவே நரேந்திர மோடி அவர்கள் உடனடியாகப் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

மாலை மலர்

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இஸ்ரேல் நாட்டிடமிருந்து பெகாசஸ் உளவுச் செயலியை மோடி அரசு வாங்கியது உண்மை என்பதை 'நியு யார்க் டைம்ஸ்' நாளேடு ஆதாரபூர்வமாக அம்பலப் படுத்தியுள்ளது.

அதன்மூலம் சுமார் 600 போன்களை அது உளவு பார்த்துள்ளது எனத் தெரியவந்துள்ளது . மோடி அரசு மக்களின் வரிப்பணத்திலிருந்து 300 கோடி ரூபாயை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம்’ என்ற அமைப்பின் மூலமாக இஸ்ரேலுக்கு அனுப்பி இருப்பது நிரூபணமாகியுள்ளது.

பெகாசஸ் விவகாரத்தில் இனிமேலும் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாத அளவுக்குக் கையும் களவுமாக மோடி அரசு பிடிபட்டு விட்டது. இந்தத் தேசத் துரோக செயல் குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சரும் உச்சநீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞரும் பொய்யான தகவல்களை கூறியுள்ளனர். இதற்கெல்லாம் பிரதமர் மோடியே பொறுப்பு ஏற்க வேண்டும்.

அந்நிய நாட்டு உளவுச் செயலியை சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தியது மட்டுமின்றி அதை மூடிமறைத்து நாடாளுமன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் ஏமாற்றியது சட்டவிரோதம் மட்டுமல்ல, தேச துரோகமும் ஆகும். இந்தக் குற்றத்தைச் செய்த ஒருவர் பிரதமர் பதவியில் நீடிப்பது இந்த நாட்டுக்கே அவமானம் ஆகும். எனவே நரேந்திர மோடி அவர்கள் உடனடியாகப் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமியற்றிப் பல மாதங்கள் ஆன பிறகும் அதற்கு ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்தும்; பெகாசஸ் மூலம் மோடி அரசு செய்துள்ள தேசத் துரோகத்தைக் கண்டும் காணாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்வரும் ஜனவரி 31 அன்று நிகழ்த்தப்பட உள்ள குடியரசுத் தலைவர் உரையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.