தென்காசி:
தென்காசி அருகே உள்ள இலஞ்சி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோட்டை மாடன் (வயது 82). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி அதே தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
கோட்டைமாடனுக்கு சொந்தமான மாந்தோப்பு தென்காசியில் இருந்து இலஞ்சி செல்லும் சாலையில் உள்ளது. கடந்த 4ந்தேதி காலை கோட்டை மாடன் வழக்கம்போல் தோப்புக்கு போய் விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்திரா தோப்புக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கோட்டை மாடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது தொடர்பாக குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் சொத்து பங்கு வைத்த தகராறில் அவரது மூத்த மகளின் கணவர் மற்றும் கடைசி மகள் ஆகியோர் சிலருடன் சேர்ந்து கோட்டை மாடனை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் கோட்டை மாடனின் மூத்த மருமகன் பரமசிவன் (58) மற்றும் கடைசி மகள் ஸ்ரீதேவி (49) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தியதில் கிடைத்த தகவல்கள் வருமாறு:
கோட்டை மாடன் வயது முதிர்வின் காரணமாக தனது சொத்துக்களை மூன்று மகள்களுக்கும் சமமாக பங்கு வைத்துக் கொடுத்து உள்ளார்.
ஆனால் மாந்தோப்பை மட்டும் யாருக்கும் பங்கு வைத்து கொடுக்காமல் இருந்துள்ளார். கோட்டை மாடன், 2வது மகளான சந்திரா வீட்டில் தங்கியிருந்துள்ளார். இதனால் தனது இறப்புக்குப் பிறகு அந்த மாந்தோப்பை சந்திராவின் மகனான விஜயகுமாருக்கு எழுதி வைக்க போவதாக மூன்று மகள்களிடமும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்கு பரமசிவன் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனாலும் கோட்டை மாடன் பேரனுக்கு மாந்தோப்பை எழுதி வைப்பதில் உறுதியாக இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பரமசிவனும், ஸ்ரீதேவியும் கோட்டை மாடனை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக பரமசிவனின் தோட்டத்தில் வேலை பார்க்கும் சேகர் என்பவரிடம் ரூ.1 லட்சம் பேரம் பேசியுள்ளனர்.
உடனே சேகர் கூலிப்படையினரான அதே பகுதியை சேர்ந்த மகேஷ், வசந்த குமார் ஆகியோரை பரமசிவனிடம் அழைத்து வந்துள்ளார். முதல்கட்டமாக மகேஷ் மற்றும் வசந்த குமார் ஆகியோருக்கு முன்பணமாக தலா ரூ. 25 ஆயிரம் கொடுத்துள்ளனர். கோட்டை மாடனை கொலை செய்த பின்னர் மீதி தொகையை தருவதாக கூறியது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து பரமசிவன், ஸ்ரீதேவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் மகேஷ், வசந்த குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இடைத்தரகராக செயல்பட்ட சேகரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.