ஓ.பன்னீர்செல்வம் 
தமிழக செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகார பலம் வெற்றி பெற்றுள்ளது- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பண பலம், படை பலம், அதிகார பலம் வெற்றி பெற்று இருக்கிறது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு, பணநாயகம் வெற்றி பெற்றிருக்கிறது.

மாலை மலர்

சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளி வந்த உடன் நான் வெளியிட்ட அறிக்கையில், ஆளும் கட்சி செயற்கையான வெற்றியை பெற்று இருக்கிறது என்றும், தேர்தல் நூறு சதவீதம் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்றிருந்தால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றிருக்கும் என்றும் தெரிவித்திருந்தேன். அது சென்னை உயர் நீதிமன்றத்தின்மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மதுரை மாவட்டம், டி. கல்லுப்பட்டி பேரூராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் பத்தாவது வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட பழனிசெல்வி என்பவரும், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமி என்பவரும் தலா 284 வாக்குகள் பெற்ற நிலையில், குலுக்கல் முறையில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டவர் வெற்றி பெற்றதாக இணைய தளத்தில் வெளியிடப்பட்டு, பின்னர் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாக மாற்றப்பட்டு, வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமி என்பவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

இதனை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுயேட்சை வேட்பாளரால் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற முதல் அமர்வு குலுக்கல் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவினை பார்வையிட்டுவிட்டு, முடிவு மாற்றி அறிவிக்கப்பட்டிருப்பது நிருபணமாகியுள்ளதாக தெரிவித்ததுடன், தொடர்புடைய தேர்தல் அதிகாரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் முன்பு நேரில் ஆஜரான தேர்தல் அதிகாரி, தி.மு.க. வேட்பாளர் தரப்பில் கொடுக்கப்பட்ட அரசியல் ரீதியிலான அழுத்தம் காரணமாகவே முடிவை மாற்றி அறிவித்ததாக கூறியிருக்கிறார். ஓர் அரசு அதிகாரியே தி.மு.க.வினரால் மிரட்டப்படுகிறார் என்றால், சாதாரண வேட்பாளர்கள் எம் மாத்திரம்! தி.மு.க.வினரின் இந்தச் செயல் கடும் கண்ட னத்திற்குரியது.

இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட சுயேட்சை வேட்பாளர், தகுந்த ஆதாரத்துடன், சாதுர்யமாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியதன் காரணமாக அவருக்கு நல்லத் தீர்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்த முறைகேடுகள் நடைபெறாமல் இருந்திருந்தால் முடிவுகள் வேறுவிதமாக இருந்திருக்கும்.

இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பண பலம், படை பலம், அதிகார பலம் வெற்றி பெற்று இருக்கிறது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு, பணநாயகம் வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கெல்லாம் மக்கள் தக்கப்பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.