ஊசி, சிகரெட் வடிவ சாக்லேட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்த காட்சி. 
தமிழக செய்திகள்

திருப்பூர் கடைகளில் ஊசி-சிகரெட் வடிவ சாக்லேட்டுகள் பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி

திருப்பூர் மாவட்ட கடைகளுக்கு இந்த சாக்லேட்டை சப்ளை செய்வோர் யார் என அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதி கடைகளில் சிறுவர்களை கவரும் வகையில் ஊசி வடிவ சாக்லெட் விற்பனை செய்யப்பட்டது. தயாரிப்பு, காலாவதி தேதியின்றி, கூடுதல் நிறம் சேர்க்கப்பட்டு விற்கப்பட்டு வந்தன. இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கவே, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தொடர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

மேலும் திருப்பூர் மாவட்ட கடைகளுக்கு இந்த சாக்லேட்டை சப்ளை செய்வோர் யார் என அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் திண்டுக்கல்லை சேர்ந்த ஷாகுல் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து திருப்பூர் அரண்மனைப்புதூரில் உள்ள அவரது வீட்டில், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவரது வீட்டில் இருந்த 34 பாட்டில்களில் தலா 30 வீதம் அடைக்கப்பட்டிருந்த 1,020 ஊசி வடிவ சாக்லேட் மற்றும் 6 கிலோ சிகரெட் சாக்லேட்டை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:-

ஆய்வு முடிவு அடிப்படையில் ஷாகுல் மீது குற்ற வழக்கு தொடரப்படும். உணவு பாதுகாப்புத் துறையின் லைசென்ஸ் எண், தயாரிப்பு, காலாவதி தேதி பொறித்த சாக்லேட்களை மட்டுமே வாங்க வேண்டும். தயாரிப்பு தேதி உள்ளிட்ட விவரங்கள் இல்லாத, தரமற்ற தின்பண்டங்கள் விற்கப்பட்டால் 94440 42333 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.