வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள குருக்கலையன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 42). இவருக்கு திருமணம் ஆகி சுதா என்ற மனைவியும், 5 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. செல்வராஜ் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.
மேலும் பணம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்துள்ளார். கட்டிட வேலைக்கு ஆட்களை அழைத்துச் செல்வதும், தனியாக கட்டிட வேலைகள் பார்த்தும் வந்துள்ளார்.
இவரது வீட்டுக்கு 1 கி.மீ தூரத்தில் தோட்டத்து வீடு உள்ளது. இந்த வீட்டில் அவரது தாய் சவுந்தரம்மாள் (65) வசித்து வந்தார். தோட்டத்தில் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டுள்ளார்.
மேலும் கால்நடைகளும் வளர்த்து வருகிறார். இதனால் இரவு நேரத்தில் அவ்வப்போது தோட்டத்து வீட்டில் தங்கி செல்வது வழக்கம். அதன்படி நேற்று இரவு செல்வராஜ் தோட்டத்து வீட்டுக்கு வந்து தனது தாயுடன் பேசிக் கொண்டு இருந்தார்.
நீண்ட நேமாக வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த அவரது மனைவி தனது கணவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் அங்கேயே தூங்கி இருக்கலாம் என நினைத்து விட்டு சுதா தனது குழந்தையுடன் தூங்கச் சென்று விட்டார்.
இன்று காலை பால் கறப்பதற்காக வந்த தொழிலாளர்கள் சவுந்தரம்மாளை அழைத்த போது எந்தவித சத்தமும் வரவில்லை. உடனே வீட்டுக்குள் எட்டி பார்த்த போது செல்வராஜூம், அவரது தாயும் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.
இது குறித்து அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் எரியோடு போலீசாருக்கும் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் வேடசந்தூர் டி.எஸ்.பி. மகேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய பிறகு இருவரது உடல்களையும் கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அது தோட்டத்து வீட்டில் இருந்து மெயின் ரோடு வரை ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.
இந்த இரட்டை கொலை குறித்து எஸ்.பி. சீனிவாசன் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட செல்வராஜ் பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த நிலையில் அவர் தனக்கு பணம் தராதவர்களிடம் கண்டிப்புடன் வசூல் செய்து வந்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். மேலும் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் சிலர் இந்த வீட்டின் அருகே வந்து சென்றதாகவும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
எனவே மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல்தான் தாய் மற்றும் மகனை வெட்டி படுகொலை செய்திருக்க கூடும் என்றும் தெரிய வந்துள்ளது. செல்வராஜின் செல்போன் எண்ணை வைத்து அவருடன் நேற்று யார்? யார்? தொடர்பு கொண்டு பேசியது என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவரது மனைவியிடமும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எரியோடு அருகே நடந்த இந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.