பொன்னேரி:
சோழவரம் அருகே அத்திப்பேடு பகுதியில் தனியார் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது.
இங்குள்ள கழிவறையில் கடந்த 3-ந் தேதி தொப்புள் கொடியுடன் பச்சிளம் பெண்குழந்தை இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது. அதனை வீசி சென்ற தாய் குறித்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சியை வைத்து விசாரித்தபோது கும்மிடிபூண்டி பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கணவரை இழந்து வாழும் 33 வயது இளம்பெண் பிறந்த குழந்தையை வீசி சென்று இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் கர்ப்பம் ஆனதும், சம்பவத்தன்று வயிற்றுவலி என்று கூறி ஆஸ்பத்திரிக்கு வந்தபோது கழிவறையில் பிரசவம் ஆனதும் தெரிந்தது.
கள்ளக்காதலில் பிறந்ததால் மறைப்பதற்காக இறந்து பிறந்த குழைந்தையை கழிவறையில் வீசி சென்றதாக அவர் போலீசில் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
எனினும் பிரசவத்தின்போது குழந்தை இறந்தே பிறந்ததா? அல்லது கழிவறையில் வீசி சென்றதால் குழந்தை இறந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.