மணிமுத்தாறு அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள். 
தமிழக செய்திகள்

2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் அனுமதி- மணிமுத்தாறு அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

சுமார் 2 வருடங்களுக்கு பிறகு மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி கிடைத்ததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி ஆரவாரத்துடன் குளித்தனர்.

மாலை மலர்

கல்லிடைக்குறிச்சி:

நெல்லை மாவட்டத்தின் முதன்மையான சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குவது மணிமுத்தாறு அருவி. இங்கு செல்வதற்கும், அருவியில் குளிக்கவும் வனத்துறையின் அனுமதி அவசியம்.

கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அருவி பகுதி சேதமடைந்தது. மேலும் கொரோனா தொற்று பரவலும் அதிகரிக்க தொடங்கியதால் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

சுமார் 2 ஆண்டுகளாக மணிமுத்தாறு அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடையால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அருவியில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குனர் செண்பக பிரியா கூறுகையில், மணிமுத்தாறு அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

தினமும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பொதுமக்கள் குளிக்கலாம். மாலை 5 மணிக்குள் அருவிக்கு சென்றவர்கள் திரும்பி விட வேண்டும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

இதனையொட்டி இன்று அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் கார்களில் அருவிக்கு செல்ல தொடங்கினர். ஏராளமானோர் மோட்டார் சைக்கிள்களிலும், வாடகை வேன்களிலும் சென்றனர்.

அங்கு வாகனங்களுக்கு கட்டணமாக ரூ.40 முதல் ரூ.50 வரை வசூலிக்கப்பட்டது. சுமார் 2 வருடங்களுக்கு பிறகு அனுமதி கிடைத்ததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்றனர்.

அங்கு ஆரவாரத்துடன் குளித்து மகிழ்ந்தனர். அருவிக்கரை பகுதியில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.