சேலம்:
இந்தியாவில் மா சாகுபடியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. குறிப்பாக சேலம், தருமபுரி மாவட்டங்களில் சேலம்- பெங்களூரா, அல்போன்சா, மல்கோவா, இமாம்பசந்த், சேலம் குண்டு, பங்கணப்பள்ளி, நடுசாலை, செந்தூரா உள்பட பல்வேறு வகையான மாம்பழங்கள் அதிக அளவில் விளைகிறது.
இந்த மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு என்பதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. வழக்கமாக சேலம் மாவட்டத்தில் பங்குனி மாதத்தில் தொடங்கும் மாம்பழ சீசன் சித்திரை மாதத்தில் இருந்து உச்சம் பெறும்.
அப்போது சேலம் மாநகரில் கடை வீதி, பஸ் நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் எங்கு பார்த்தாலும் மாம்பழங்கள் குவித்து வைக்கப்பட்டு விற்பனை நடைபெறும், மேலும் தள்ளுவண்டிகளிலும் தெரு தெருவாக சென்று வியாபரிகள் மாம்பழங்களை விற்பனை செய்வார்கள்.
இந்த நிலையில் நடப்பாண்டில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் மாம்பழங்கள் வரத்து குறைவாகவே உள்ளது. ஆனாலும் கடந்த வாரத்தை விட தற்போது மாம்பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடை வீதி, ஏற்காடு பிரதான சாலை, பழக்கடைகளிலும் மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது.
வெளியூர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. ஆன்லைன் விற்பனையும் சூடு பிடித்துள்ளது. இதனால் விலையும் கடந்த வாரத்தை விட சற்று குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலத்தில் மல்கோவா மாம்பழங்கள் ஒரு கிலோ 160 ரூபாய்க்கும், சேலம்-பெங்களூரா 120 ரூபாய்க்கும், சேலம் குண்டு அல்போன்சா, இமாம்பசந்த், பங்கணப்பள்ளி, செந்தூரா ரக பழங்கள் ரூ.100-க்கும் விற்பனையாகிறது. கடந்த வாரத்தை விட கிலோவுக்கு 20 முதல் 50 ரூபாய் வரை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மாம்பழங்களை அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.
இது குறித்து சேலம் மாம்பழ வியாபாரிகள் கூறியதாவது:-
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் மாம்பழங்கள் வரத்து தற்போது குறைவாக இருந்தாலும் கடந்த வாரத்தை விட தற்போது மாம்பழ வரத்து அதிகரித்துள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் அதிக அளவில் மாம்பழங்கள் உற்பத்தியாகிறது.
சேலம் மாவட்டத்தில் வரகம்பாடி, அடிமலைப்புதூர், அயோத்தியாப்பட்டணம், நங்கவள்ளி, தாரமங்கலம், ஜலகாண்டாபுரம், மேச்சேரி உள்பட பகுதிகளிலும் மாமரங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த பகுதிகளில் விளையும் மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டுக்கும், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.
வழக்கமாக மாமரங்கள் பூக்கள் விடும்போது மழை பெய்ய கூடாது, ஆனால் கடந்தாண்டு டிசம்பர் மற்றும் நடப்பாண்டு ஜனவரி முதல் வாரம் வரை மழை பெய்தது. இதனால் மாமரங்களில் பூக்கள் உதிர்ந்ததால் கடந்த ஆண்டை விட உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது. ஆனாலும் இந்த வாரத்தில் மாம்பழங்கள் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் 15 டன்னாக இருந்த மாம்பழ வரத்து படிப்படியாக உயர்ந்து தற்போது சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 25 டன்னுக்கும் மேலாக வருகிறது. இதனால் விலையும் தற்போது குறைந்துள்ளது. இனி வரும் நாட்களில் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.