கும்கி யானை 
தமிழக செய்திகள்

குட்டக்கொம்பு யானையை பிடிக்க 2 கும்கிகள் தீவிர தேடுதல் வேட்டை

ஒற்றை யானையை பிடிக்கும் பணிகள் முடியும் வரை இப்பகுதி மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச்சரகத்துக்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில் சமீப காலமாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பண்ணைப்பட்டி, வைகை பண்ணை அருகே வேட்டை தடுப்பு காவலர் சுந்தரமூர்த்தி யானை தாக்கி உயிரிழந்தார். விவசாயிகளின் கோரிக்கையால் டாப்சிலிப்பில் இருந்து கலிம், சின்னதம்பி ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. பண்ணைப்பட்டி, கோம்பை அருகே முத்துப்பாண்டி கோவில் பகுதியில் இந்த யானைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

பகல் முழுவதும் தொடர்ந்த நிலையில் யானைகள் நடமாட்டம் குறைந்தது. 24 மணி நேர கண்காணிப்பு பணியை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கலெக்டர் விசாகன் வனத்துறையினருக்கு அறிவுறுத்தினார்.

சம்பவ இடத்துக்கு நேரடியாக சென்ற அவர், அங்குள்ள வன அலுவலர்கள், யானை பாகனிடம் யானையை பிடிக்கும் பணிகளை விரைந்தும், மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். நீங்கள் எவ்வளவு விரைவாக இப்பணியை செய்து முடித்தால் இப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்உங்களுக்கு என்ன உதவிகள் தேவையோ அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றார்.

மேலும் குட்டக்கொம்பு ஒற்றை யானையை விரைவில் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒற்றை யானையை பிடிக்கும் பணிகள் முடிக்கும் வரை இப்பகுதி மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார். வனப்பகுதியில் தற்போது 12 யானைகளுடன் குட்டைக்கொம்பு ஒன்றாக சேர்ந்து விட்டது. அதனை தனியாக பிரித்து கும்கி யானைகளுடன் ஒன்றாக பழக வைக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.