ஜான் பென்னிக்குக் 1841ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் பிறந்தவர்.
அங்குள்ள ராணுவ கல்லூரியில் படித்தவர். இவர் கிரேஸ் ஜார்ஜியான சாமியர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.
பென்னிக்குக் சென்னை அரசின் பொதுப்பணித்துறை பொறியாளர் மற்றும் செயலாளராக 1895ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி நியமிக்கப்பட்டார்.
இந்திய நாட்டை ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் இவர் ராணுவ பணி பொறியாளராக இந்தியாவிற்கு வந்தார். அந்த காலகட்டத்தில் பெரியாறு அணை கட்டப்படுவதற்கு முன்பு சென்னை மாகாணத்தில் வைகை வடிநில பரப்பில் பலமுறை பருவமழை பொய்த்து மிகுந்த உணவு பஞ்சம் ஏற்பட்டது.
இதனால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதனை கண்டு வருத்தமடைந்த பென்னிக்குக் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாக கடலில் கலப்பதை பார்த்து இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்ட முடிவு செய்தார். இதற்கான திட்டத்தை ஆங்கிலேயே அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் 1895ஆம் ஆண்டில் அக்டோபர் 11ம் தேதி அப்போதைய சென்னை மாகாண கவர்னர் வெண்லாக் முன்னிலையில் பணிகள் தொடங்கின.
அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்ற பல்வேறு தடைகளை கடந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் பாதி பணிகள் நிறைவடைந்தன. அதன் பிறகு இத்திட்டத்திற்கு பணம் ஒதுக்க ஆங்கிலேய அரசு மறுத்துவிட்டது. இருந்த போதும் பென்னிக்குக் தன் குடும்ப சொத்துகள் அனைத்தையும் விற்று அதில் கிடைத்த பணத்தை கொண்டு வந்து பெரியாறு அணையை கட்டி முடித்தார்.
இதன் மூலம் இன்றுவரை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் பாசன வசதி கிடைத்து வருகிறது. இதனால் 5 மாவட்ட விவசாயிகள் ஜான்பென்னிக்குக்கை தங்கள் கடவுளாக நினைத்து இன்று வரை வழிபட்டு வருகின்றனர்.
தமிழக அரசு அவரது நினைவை போற்றும் வகையில் தேனி மாவட்டம் கூடலூர் லோயர் கேம்ப் பகுதியில் 2500 சதுரடி பரப்பில் ரூ.1.25 கோடி செலவில் வெண்கல பென்னிக்குக் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை நிறுவியது. இந்த மண்டபத்தை கடந்த 15.01.2013ம் தேதி அன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மக்களுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த ஜான்பென்னிக்குக் 1911ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி மறைந்தார். அவரது 111வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.