ஆரல்வாய்மொழி:
தோவாளை பூ மார்க்கெட்டுக்கு தோவாளை, ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல்லை மாவட்டம் ஆவரைகுளம், பழவூர் பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. ஓசூர், பெங்களூர், மதுரை போன்ற பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகிறது.
கடந்த சில நாட்களாக பூக்கள் அதிகளவு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் பூக்களை வாங்குவதற்கு தோவாளை பூ மார்க்கெட்டில் வியாபாரிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. இதனால் பூக்களின் விலை சரிந்து காணப்பட்டது. மல்லிகை கிலோ ரூ.100க்கு மட்டுமே விற்கப்பட்டு வந்தது. தற்போது பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைய தொடங்கியுள்ளது.
கார்த்திகை மாதம் மற்றும் கோவில்களில் வழிபாடு, சபரிமலை சீசன், திருமண சீசன் என அடுத்தடுத்து வருவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் வியாபாரிகள் பூக்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
கடந்த வாரம் ஒரு கிலோ பிச்சி, மல்லிகைப்பூ ரூ.1000க்கு விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மல்லிகை பூ கிலோ ரூ.3 ஆயிரமாக உயர்ந்தது. இன்று பூக்களின் விலை மேலும் உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ மல்லிகை ரூ.3500க்கு விற்கப்பட்டது. பிச்சிப்பூ கிலோ ரூ.2000க்கு விற்பனையானது. இதேபோல் மற்ற பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. பூக்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில் தமிழகம் முழுவதும் ஏற்கனவே பெய்த மழை மற்றும் தற்போது பெய்து வரும் பனிப்பொழிவின் காரணமாக பூக்களின் உற்பத்தி குறைந்துள்ளது. பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. பூக்களின் தேவை அதிகரித்து வருகிறது. தேவைக்கேற்ப பூக்கள் கிடைக்கவில்லை. இன்னும் பூக்கள் விலை உயர வாய்ப்பு உள்ளது என்றார்.