திருப்பூர்:
ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளுக்கான டீ-சர்ட்டுகள் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஒவ்வொரு ஆண்டும் தயாரித்து கொடுக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பின் காரணமாக தயாரித்து வைக்கப்பட்ட டீ-சர்ட்டுகள் விற்பனையாகாமல் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு நேற்று ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடங்கிய நிலையில் திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தியாளர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே ஒவ்வொரு அணிக்கான டீ-சர்ட்டுக்களை தயாரித்து வைத்திருந்தனர். தற்போது அவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு அணியின் ரசிகர்கள் அணிவதற்காக வியாபாரிகள் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஆர்டர்கள் கொடுத்து வாங்கி வருகின்றனர். இதுகுறித்து ஆடை தயாரிப்பாளர் பிரபு கூறியதாவது:-
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட அணிகள் பங்கேற்று வருகின்றன. இந்த ஆண்டு லக்னோ மற்றும் குஜராத் உள்ளிட்ட புதிய அணிகளும் பங்கேற்றுள்ளன.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த அணியின் வீரர்கள் அணியும் டீ-சர்ட்டுகளை போன்று தயாரிக்கப்படும் டீ-சர்ட்டுக்களை வாங்கி அணிந்து தங்களது ஆதரவை தெரிவிப்பார்கள். இதுபோல் மைதானத்திற்கு செல்பவர்களும் தங்களுக்கு பிடித்த அணியின் டீ-சர்ட்டுக்களை வாங்கி அணிவார்கள். இதனால் ஐ.பி.எல். சீசன் தோறும் டீ-சர்ட்டுக்கள் விற்பனை அதிகரிக்கும்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாததால் டீ-சர்ட்டுக்கள் விற்பனை ஆகாமல் தேங்கின. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நேற்று தொடங்கிய நிலையில் பார்வையாளர்கள் 25 சதவீதம் பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் தங்களது அணியின் டீ-சர்ட்டுக்களை அணிந்து மைதானத்திற்கு செல்கின்றனர். இதனால் டீ-சர்ட் ஆர்டர்கள் திருப்பூர் பனியன் நிறுவனங்களில் குவிந்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே 8அணிகளின் டீ-சர்ட்டுக்களை தயாரித்து வைத்திருந்தோம். வெளி மாநில வியாபாரிகள் கேட்கும் ஆர்டர்கள் மூலம் அவற்றை உடனுக்குடன் அனுப்பி வைத்து வருகிறோம்.
கடந்த 2 ஆண்டுகளாக டீ-சர்ட் விற்பனை சரிவை சந்தித்த நிலையில், இந்த ஆண்டு சற்று விற்பனை அதிகரித்துள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.