திருச்சி அருகே உள்ள இனாம்குளத்தூர் பகுதியில் காஜியார் முகமது யூசுப் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் ஒரு மாணவி ஒருவரிடம் திருப்புதல் தேர்வு நடக்கும்போது அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் முருகேசன் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும் சில மாணவிகளையும் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிகிறது. இதனை அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர், எச்சரிக்கும் விதமாக அவருக்கு 10 நாட்கள் கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்பியுள்ளார்.
10 நாட்கள் கழித்த பின்னர் முருகேசன் மீண்டும் பணிக்கு திரும்பினார். ஆனால் மீண்டும் தனது சேட்டையை தொடங்கி அரங்கேற்றி வந்துள்ளார். இதையடுத்து பொறுத்துப்பார்த்து பொறுமை இழந்த பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் தனது பெற்றோரிடம் அசிரியரின் அக்கிரமங்கள் மற்றும் நடந்த சம்பவங்களை கூறி கதறி அழுதார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஊர் மக்களுடன் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதனால் பதறிப்போன ஆசிரியர் பள்ளி அறையை உட்பக்கமாக பூட்டிக்கொண்டு உட்கார்ந்து விட்டார். இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், பள்ளி ஆசிரியர் முருகேசன் மற்றும் சக ஆசிரியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்ட னர். இதில் முருகேசன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவரை ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் முருகேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை ஜெயிலில் அடைத்தனர்.
இதற்கிடையே பாலியல் புகாரில் சிக்கி கைதான முருகேசனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி சஸ்பெண்டு செய்து இன்று உத்தரவிட்டார்.
இதையும் படியுங்கள்...நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 16-ந்தேதி வரை 670 புகார்கள் மீது நடவடிக்கை- தேர்தல் ஆணையம் தகவல்