முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், செ.தாமோதரன், வி.பி.கந்தசாமி, அமுல்கந்தசாமி, கே.ஆர்.ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏக்கள் உள்பட அ.தி.மு.க.வினர் 20க்கும் அதிகமானோர் நேற்று காலை கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
பின்னர் அவர்கள் திடீரென்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும், வெளியூர்காரர்களை உடனடியாக மாவட்டத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கலெக்டர் சமீரன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஜெயச்சந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்கள் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.
ஆனாலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏக்கள் மற்றும் அ.தி.மு.கவினர் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு போலீஸ் வேன் கொண்டு வரப்பட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட அ.தி.மு.கவினரை போலீசார் கைது செய்ய முயன்றனர்.
அப்போது அவர்கள் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபடவே போலீசார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினரை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.
பின்னர் அவர்களை வேனில் ஏற்றி கொண்டு, காந்திபுரம் ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இரவு 9.30 மணிக்கு கைதான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்.எல்.ஏக்கள், அ.தி.மு.கவினர் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. மற்றும் 8 எம்.எல்.ஏக்கள் உள்பட அ.தி.மு.கவினர் 13 பேர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், தொற்றுநோய் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
விடுவிக்கப்பட்ட பிறகு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாங்கள் நேற்றுமுன்தினம் இரவு கொடுத்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து கேட்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று, யாருக்கு எவ்வித பாதிப்பும் இன்றி அமர்ந்து இருந்தோம்.
எங்களை கைது செய்து 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர். தி.மு.க ஆட்சிக்கு வந்து எந்த திட்டமும் கோவைக்கு கொண்டு வரவில்லை. தி.மு.க. மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும். அ.தி.மு.க வெற்றி பெற்றால் அதனை மாற்றி அறிவிக்க கோரி கூட்டம் போட்டு பேசியுள்ளனர்.
எனவே வாக்கு எண்ணும்போது ஒவ்வொரு வார்டுகளிலும் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும்போது வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. கோவைக்கு கூடுதலாக ஒரு தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். கோவையில் இருந்து வெளியூர்க்காரர்கள் வெளியேறாவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு