கோப்பு படம் 
தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் ஏப்ரல்-டிசம்பர் மாதங்களில் அன்னிய முதலீடு 41.5 சதவீதம் அதிகரிப்பு

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் திருப்தியாக இருந்த காரணத்தால் பல்வேறு புதிய நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கண்டன.

சென்னை:

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த மே 7-ந் தேதி பதவி ஏற்ற காலக்கட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்தது. அந்த சமயத்தில் இந்திய அளவில் தொழில் வளர்ச்சி மந்தமாக காணப்பட்டது.

ஆனாலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கொரோனா பரவலை வேகமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது போல் தொழில் வளர்ச்சி மேம்படவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இதன் காரணமாக தமிழகத்தில் மூடிக் கிடந்த தொழில் நிறுவனங்கள், சிறு குறு தொழிற்சாலைகள் அனைத்தும் இயங்கத் தொடங்கியது.

அதுமட்டுமின்றி தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கான கட்டமைப்புகளை மேம்படுத்தி அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நடவடிக்கைகளை மேற் கொண்டார்.

அவரது ஆலோசனையின் பேரில் தொழில் துறை அதிகாரிகள் தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்து தமிழகத்தில் தொழில் தொடங்குமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் திருப்தியாக இருந்த காரணத்தால் பல்வேறு புதிய நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கண்டன.

அதன் காரணமாக மொத்தம் 124 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதனால் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் மற்றும் அபுதாபிக்கு சென்று அங்கும் தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு அழைப்பு விடுத்ததின் பேரில் புதிதாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன. இதன் மூலம் 3 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு கிடைக்க வழிவகை காணப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் உள் நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை தரவுகளின்படி நாட்டின் மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் தமிழகத்தின் பங்கு 4 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், டெல்லி ஆகியவற்றுக்கு பிறகு தமிழகம் 5-வது அதிக பங்கு வகிக்கிறது.

அதாவது ஏப்ரல் முதல் செப்டம்பர் 2021 காலக்கட்டத்தில் மட்டும் தமிழகம் ரூ. 8,364 கோடியை ஈர்த்துள்ளது.

தமிழ்நாட்டில் அன்னிய நேரடி முதலீடு (எப்.டி.ஐ.) ஏப்ரல் - டிசம்பர் காலக்கட்டத்தில் மட்டும் 41.5 சதவீ தம் அதிகரித்து ரூ. 17,696 கோடியாக உயர்ந்தது. இதே காலக்கட்டத்தில் 2020-ம் ஆண்டை ஒப்பிடுகையில் ரூ. 12,504 கோடி தான் இருந்தது.

ஏப்ரல் - டிசம்பர் மாதங்களில் இந்தியாவில் அன்னிய முதலீடு குறைந்திருந்த சூழலில் தமிழகத்தில் அன்னிய முதலீடு அதிகரித்தது பெரிய வி‌ஷயம் என்று தொழில் வல்லுனர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கான மந்திரி சோம பிரகாஷ் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில் 2021-ம் ஆண்டில் தமிழகம் சுமார் 3.02 பில்லியன் டாலர் அன்னிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது என்று பெருமைப்பட கூறி உள்ளார்.

அன்னிய முதலீடு என்பது வணிக ரீதியான பார்வையை பொறுத்து முடிவு செய்ய வேண்டிய வி‌ஷயமாகும். அந்த வகையில் இயற்கை வளங்கள் கிடைக்கும் தன்மை, சந்தை அளவு, உள் கட்டமைப்பு, அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை செய்வார்கள்.

அந்த வகையில் பல தொழில் அதிபர்கள் தமிழகத்தை தேர்வு செய்து முதலீடு செய்துள்ளது பாராட்டத்தக்கது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கட்டுமானம் நிதிச் சேவைகள், உற்பத்தி துறைகள், ஆட்டோ, எலக்ட்ரானிக்ஸ் மெ‌ஷனரி உள்ளிட்டவற்றில் கணிசமாக அன்னிய நேரடி முதலீட்டை தமிழகம் ஈர்த்துள்ளது.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் துபாய்-அபுதாபியில் உள்ள தொழில் அதிபர்களிடம் பெருமையாக கூறுகையில், கடந்த 10 மாதங்களில் மட்டும் 8 பில்லியன் டாலர் முதலீட்டிற்கான 124 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும் இதன் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT