திருச்சி:
திருச்சி மாவட்டம் மணப்பாறை வளநாடு கொடும்பபட்டி பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 70).
இவரது மகன்கள் ராமசாமி (56 ),சிவக்குமார் (42), செந்தில்குமார் ( 40).
இதில் செந்தில்குமாரின் தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தின் மட்டைகள் அருகில் உள்ள அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது வீட்டில் விழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த செல்வம் மற்றும் அவரது மகன் தினேஷ் 19 ஆகிய இருவரும் செந்தில்குமாரிடம் தகராறு செய்தனர்.
பின்னர் அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த தென்னை மரத்தை அத்து மீறி வெட்டியுள்ளனர்.
இதனைப் பார்த்த செந்தில்குமாரின் மூத்த சகோதரர்கள் ராமசாமி, சிவக்குமார், தாயார் நாகம்மாள் ஆகியோர் அவர்களை தட்டி கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த செல்வம் மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து சிவக்குமார், ராமசாமி அவர்களின் தாயார் நாகம்மாள், மற்றும் தனம் (48) ஆகிய 4 பேரின் முகத்திலும் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி கம்பியால் தாக்கி விட்டு தப்பி ஓடினர்.
இதில் பலத்த காயமடைந்த 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வம் மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
தென்னை மட்டை விழுந்த அக்கப்போரில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.