திருப்பத்தூர்:
திருப்பத்தூர் சாமி நகரை சேர்ந்தவர் சுகுமார் (வயது 55). இவர் சட்டவிரோதமாக கர்ப்பிணிகள் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என ஸ்கேன் மூலம் கண்டறிந்து பணம் சம்பாதித்து வந்தார்.
இவரை நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். அவர் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறிவது மட்டுமல்லாமல் பெண் குழந்தைகளை கருவிலேயே அழிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார்.
இதன்மூலம் பல லட்சம் பணம் சம்பாதித்து சொத்துக்களை குவித்துள்ளார். சுகுமார் பி.எஸ்.சி பட்டப்படிப்பு முடித்துள்ளார். மேலும் ஸ்கேன் பற்றிய டிப்ளமோ படித்தார். கடந்த 20 ஆண்டுக்கு முன்பு திருப்பத்தூர் மீனாட்சி தியேட்டர் எதிரே சொந்தமாக ஸ்கேன் சென்டர் திறந்தார்.
ஆனால் இதில் போதுமான வருமானம் இல்லை எனக் கருதிய அவர் திருப்பத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உள்ள ஸ்கேன் சென்டர்களில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு வரும் கர்ப்பிணிகளிடம் நைசாக பேச்சு கொடுத்து கருவில் இருக்கும் குழந்தைகள் ஆணா, பெண்ணா என்பது பற்றி தன்னால் தெரிவிக்கமுடியும் என கூறியுள்ளார்.
அதற்கான கட்டணத்தை பெற்று கருவில் இருக்கும் குழந்தை ஆணா. பெண்ணா என்பதை தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல் பெண் குழந்தை என்றால் அவற்றை அழிக்கும் செயலில் ஈடுபட்டார். இதில் பணம் அதிகளவில் வரத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வீடு வாடகைக்கு எடுத்து ஸ்கேன் சென்டர் திறந்தார்.
இதுபற்றிய அப்போது தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் சுகுமாரை மடக்கி பிடித்தனர்.
அவரது ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்தனர். மேலும் சுகுமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
ஜெயிலில் இருந்து வெளியே வந்த சுகுமார் மீண்டும் இந்த செயலில் ஈடுபட்டார். இதுவரை 4 முறை கைதாகியுள்ளார்,
இந்த முறை இதனை விரிவுபடுத்த முடிவு செய்தார்.
இதற்காக தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புரோக்கர்களை நியமித்தார். அவர்கள் மூலம் கர்ப்பிணிகளை திருப்பத்தூருக்கு வரவழைத்தார். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் நர்சுகள் சிலர் போலி டாக்டர் சுகுமாருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
அவர்கள் கமிஷன் பெற்றுக்கொண்டு பெண்களை ஸ்கேன் எடுக்க அனுப்பி வைத்து புரோக்கராக செயல்பட்டு உள்ளனர்.
சுகுமார் சந்தேகம் வராமல் இருக்க திருப்பத்தூர் அடுத்த கதிரம்பட்டி மகிமை காரன் தோட்டம் என்கிற காட்டுப்பகுதியில் ஒரு குடிசையில் ஸ்கேன் செய்யும் எந்திரங்களை அமைத்துக்கொண்டார். அங்கு கர்ப்பிணிகளை வரவழைத்து அவர்கள் கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை கண்டறிந்து கூறினார்.
இதற்காக மிரண்டா, பேண்டா ஆகிய ரகசிய வார்த்தைகளை அவர் பயன்படுத்தி வந்துள்ளார். அதாவது பேண்டா என்றால் பெண் குழந்தை மிரண்டா என்றால் ஆண் குழந்தை என வார்த்தைகளை பயன்படுத்தி வந்தார். கருவில் இருக்கும் போதே பெண் குழந்தை என்பது தெரியவந்தால் பலர் குழந்தைகளை அழிக்க முன்வந்துள்ளனர்.
மேலும் அவருக்கு உதவியாக வேடியப்பன் என்பவரை பணியில் வைத்திருந்தார்.
திருப்பத்தூர் மட்டுமின்றி தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து இவரிடம் ஸ்கேன் எடுக்க பெண்கள் அதிகளவில் வரத் தொடங்கினர்.
கருவில் இருப்பது ஆணா பெண்ணா என கண்டறிய ரூ.10,000 முதல் 15,000 வரை வசூல் செய்தார். இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் வரை பணம் சம்பாதித்தார்.ஒரு மாதத்திற்கு ரூ.50 லட்சம் வரை பணம் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.
புரோக்கர் மூலம் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் கர்ப்பிணி பெண்கள் திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கு வந்ததும் சுகுமாரின் ஆட்கள் அவர்களை தொடர்பு கொள்வார்கள். ஆட்டோ மூலம் அவர்களை மகிமை காரன் தோட்டத்தில் குடிசையில் இயங்கும் ஸ்கேன் சென்டருக்கு அழைத்து வருவார்கள்.
ஆட்டோவில் இறங்கியதுமே கர்ப்பிணிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் செல்போன்களை அணைத்து வைத்துவிட வேண்டும்.
ரகசிய இடத்தில் சுகுமார் ஸ்கேன் சென்டர் நடத்தி சட்டத்திற்கு முரணாக ஈடுபட்ட தகவல் சுகாதாரத்துறையினருக்கு தெரியவந்தது.
நேற்று சென்னை சுகாதாரத்துறை கண்காணிப்பு குழு கமலக்கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் பெண் ஒருவரை தயார் செய்து தனது வயிற்றில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை கண்டறிய வேண்டும் என்பது குறித்து சுகுமாரை தொடர்பு கொண்டு பேச செய்தனர்.
அவர்கள் கூறியபடி சுகாதாரத்துறை அதிகாரிகள் பெண்ணை அழைத்துக் கொண்டு திருப்பத்தூர் பஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கிருந்து சுகுமார் ஆட்கள் மூலம் மகிமை காரன் தோட்டத்திற்கு சென்றனர். அங்குள்ள குடிசையில் கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்று ஸ்கேன் மூலம் கண்டறிந்து கொண்டிருந்தனர். ஸ்கேன் செய்ய 10 கர்ப்பிணி பெண்கள் வெளியே அமர வைக்கப்பட்டிருந்தனர்.
குடிசை வீட்டில் கர்ப்பிணி ஒருவருக்கு ஸ்கேன் எடுத்துக்கொண்டிருந்த சுகுமார் அவரது உதவியாளர் வேடியப்பன் ஆகிய 2 பேரையும் மடக்கிப் பிடித்தனர். குடிசையில் இருந்த ஸ்கேன் செய்யும் கருவி மற்றும் ரூ.75 ஆயிரம் பறிமுதல் செய்தனர். அங்கிருந்த கர்ப்பிணி பெண்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
சுகுமார், வேடியப்பன் இருவரையும் திருப்பத்தூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ஸ்கேன் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்ட சுகுமாருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இருவரும் டாக்டர்களாக உள்ளனர்.
ஸ்கேன் சென்டர் நடத்தி சுகுமார் பல கோடி சொத்து சேர்த்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.