சிறுமுகை:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெத்திக்குட்டை காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மூலையூர் வனப்பகுதியில் சென்றபோது துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் துர்நாற்றம் வந்த திசைநோக்கி சென்றனர்.
அப்போது அங்கு பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. மேலும் யானை இறந்து ஒரு வாரத்திற்கு மேல் இருக்கும் என தெரிகிறது.
உடனடியாக சம்பவம் குறித்து சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனச்சரகர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட வன அலுவலர் தலைமையில் வனக்கால்நடை மருத்துவர் சுகுமார், உதவி கால்நடை மருத்துவர் தியாகராஜன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் இறந்து கிடந்த யானையின் உடலை பார்வையிட்டனர். தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் முன்னிலையில் யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் யானை உள் உறுப்புகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அது வந்த பின்னரே யானையின் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
வனத்துறையினர் தொடர்ந்து யானை இறப்பிற்கான காரணம் என்ன? மோதலில் இறந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போன்று பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதியில் நீரில் மூழ்கிய நிலையில் ஒரு பெண் யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சிறுமுகை வனச்சரகத்தில் யானைகள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. இது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனத்துறையினர் தொடர்ந்து வனப்பகுதியில் ரோந்து மேற்கொண்டு கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.