திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே கன்னிவாடி கசவனம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தபாண்டி(42). விவசாயி. இவருக்கு திருமணமாகி பூங்காணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் ஆனந்தபாண்டி அப்பகுதியில் உள்ள மாட்டுக்கொட்டகையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் கன்னிவாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று ஆனந்தபாண்டியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மாட்டுக்கொட்டகை உரிமையாளர் மணிகண்டன் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொலையுண்ட ஆனந்தபாண்டியும், மணிகண்டனும் நண்பர்கள். இதனால் அவரது வீட்டுக்கு ஆனந்தபாண்டி அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது மணிகண்டனின் மனைவி கருமணிசெல்வி(36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். சம்பவத்தன்றும் கள்ளக்காதலர்கள் தனிமையில் பேசிக்கொண்டிருந்தபோது மணிகண்டன் திடீரென வந்து விட்டார்.
இதனால் அவர்கள் பதட்டம் அடைந்தனர். தான் மிகவும் நம்பிய நண்பனே மனைவியை அபகரித்ததால் மணிகண்டனுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது.
இதில் அவர் ஆனந்தபாண்டியை கடுமையாக தாக்கினார். இந்த விசயம் வெளியே தெரிந்தால் தனக்கு அவமானம் என்பதால் அவரை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி மனைவியுடன் சேர்ந்து ஆனந்தபாண்டியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் மாட்டுகொட்டகையில் தூக்கில் தொங்கவிட்டனர். போலீசார் துரிதமாக செயல்பட்டதால் உண்மை வெளிவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி கருமணிசெல்வி ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.