ஆனைமலை:
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள சக்தி நகரை சேர்ந்தவர் ஹரிஹரசுதாகர்(வயது18). இவர் தலித் வகுப்பை சேர்ந்தவர்.
இவர் அதே பகுதியை சேர்ந்த மேஜர் ராமசாமி என்பவரின் தோட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த தோட்டத்திற்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மதுரையை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் சமையல் வேலைக்கு வந்தார். ஒரே இடத்தில் வேலை செய்ததால் அந்த பெண்ணுக்கும் ஹரிஹரசுதாகருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்கள் காதலிக்க தொடங்கினர்.
பின்னர் 2 பேரும் தோட்டத்தில் வேலை நேரங்களில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இவர்களது காதல் விவகாரம் தோட்டத்து உரிமையாளரான ராமசாமிக்கு தெரியவந்தது. அவர் ஹரிஹரசுதாகரை அழைத்து வேலைக்கு வந்த பெண்ணிடம் இதுபோன்று நடந்து கொள்ளக் கூடாது என கண்டித்தார்.
இதற்கிடையே ஹரிஹரசுதாகர் அந்த தோட்டத்தில் இருந்து திடீரென வேலையை விட்டு நின்று விட்டார்.
வேறு ஒரு தோட்டத்தில் இளநீர் பறிக்கும் வேலைக்கு சென்று வந்தார். வேலையை விட்டு நின்றாலும் அவர் தனது காதலியுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இது தோட்டத்து உரிமையாளர் ராமசாமிக்கும், அவரது மனைவிக்கும் தெரியவந்தது.
இதையடுத்து ராமசாமியின் மனைவி கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஹரிஹரசுதாகரின் பெரியம்மாவை சந்தித்து, உங்கள் மகன் வேலையை விட்டு நின்ற பிறகும் எங்கள் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணிடம் தொடர்ந்து போனில் பேசி வருகிறார். அவரை கண்டித்து வைக்குமாறு கூறியுள்ளார். மேலும் அவரையும் சந்தித்தும், உனக்கு அவள் பணம் எதுவும் தந்தாளா? என்று கேட்க அவர் தரவில்லை என கூறிவிட்டு சென்றார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஹரிஹரசுதாகர், மிலிட்டரி ராமசாமி வீட்டிற்கு சென்றார். அங்கு வாசலில் நின்று கொண்டு, அந்த பெண்ணின் பெயரை சொல்லி, உன்னுடன் பேச வேண்டும் வெளியில் வா என சத்தம் போட்டு அழைத்தார். ஆனால் வெகுநேரமாகியும் யாருமே வரவில்லை. இதையடுத்து அவர் காம்பவுண்ட் சுவர் ஏறி வீட்டிற்குள் குதித்தார். இதனை அங்கு வேலை பார்த்து வந்த கேசவன், காளிமுத்து, ராசாத்தி, ராமன் பார்த்து விட்டனர்.
அவர்கள், ஹரிஹர சுதாகரிடம் எதற்காக இந்த நேரத்தில் இங்கு வந்தாய் என கேட்டனர். அதற்கு அவர் நான் எனது காதலியை பார்க்க வந்தேன். அவளை வெளியில் அனுப்புங்கள் பார்த்து பேசி விட்டு சென்று விடுகிறேன் என்றார்.
ஆனால் அங்கிருந்தவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். மேலும் அவரை உன்னிடம் தனியாக பேச வேண்டும் என கூறி அருகே உள்ள தோட்டத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு சென்றதும், ராமனும், காளிமுத்துவும் சேர்ந்து ஹரிஹர சுதாகரை பிடித்து மரத்தில் கட்டி வைத்தனர். பின்னர் ராமன், காளிமுத்து, கேசவன், ராசாத்தி மற்றும் 2 வடமாநில வாலிபர்கள் சேர்ந்து தோட்டத்தில் கிடந்த மூக்கணாங்கயிறு மற்றும் கட்டையை எடுத்து அவரை சரமாரியாக தாக்கினர்.
இதில் அவருக்கு முதுகு, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார். இதனை தோட்ட உரிமையாளர் ராமசாமி அமர்ந்து வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அவனை அவிழ்த்து விடுங்கள் என கூறி விட்டு வீட்டிற்குள் சென்று விட்டார். இதையடுத்து அங்கிருந்தவர்கள், கட்டை அவிழ்த்து விட்டு, தண்ணீர் தெளித்து அவரை மயக்கத்தில் இருந்து விடுவித்தனர். மேலும் இனி இந்த பக்கம் வந்தால் உன்னை குத்தி கொலை செய்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து அனுப்பினர்.
வீட்டிற்கு சென்ற ஹரிஹர சுதகார் பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை சொல்லாமல் தூங்கி விட்டார்.
மறுநாள் மகனின் உடலில் காயம் இருந்ததை பார்த்து அதிர்ச்சியான அவரது தந்தை குமார், மகனை வேட்டைக்காரன் புதூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மகனிடம் விசாரித்தார்.
அப்போது தனக்கு நடந்த சம்பவங்களை அவர் தெரிவித்தார். இதையடுத்து குமார் சம்பவம் குறித்து ஆனைமலை போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் ஹரிஹரசுதாகரை தாக்கியதாக மேஜர் ராமசாமி, கேசவன், ராமன், காளிமுத்து, ராசாத்தி, 2 வடமாநில தொழிலாளர்கள் உள்பட 7 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தலித் வாலிபர் கொடூரமாக தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்கியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரியும் பொள்ளாச்சி அனைத்து இயக்கங்கள் சார்பில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் சப்-கலெக்டரை சந்தித்து வாலிபரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனுவும் அளித்தனர்.