சங்கு 
தமிழக செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரத்து குறைவால் நலிந்து போன சங்கு தொழில்

சங்கு குளிக்கும் தொழிலில் உழைப்பு அதிகமாகவும், ஊதியம் குறைவாகவும் உள்ளது. சங்குகள் வரத்து குறைவால் சங்கு தொழில் நலிவடைந்து வருகிறது.

மாலை மலர்

கீழக்கரை:

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் களை கட்டி நடந்த சங்கு விற்பனை வரத்து குறைவு காரணமாக மந்த நிலையில் தொழில் நடந்து வருகிறது. இந்த தொழிலில் ஈடுபட்ட பலர் மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர்.

கடலுக்கு செல்லும் மீனவர்கள் வலைகளில் மீன்கள் மட்டுமில்லாமல் அரிய வகை சங்கு வகைகளும் அகப்படும். வலம்புரி சங்கு, பால் சங்குகளை பூஜை அறையில் வைத்து வழிபடுவதற்காக மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.

இதன் காரணமாக இந்த சங்குகளுக்கு வியாபாரிகள் மத்தியில் எப்போதும் கிராக்கி இருந்து வருகிறது. சிலந்தி சங்கு, கூம்பு சங்கு, குதிரை முள்ளி சங்கு போன்ற அபூர்வ வகை சங்குகளை பிடிக்க தடை உள்ளதால் வலையில் அகப்பட்டாலும் மீனவர்கள் கடலோரத்தில் கொட்டி விட்டு செல்கின்றனர். இது நாளடைவில் மக்கி உடைந்து விடுகிறது.

சங்கு குளிக்கும் தொழிலில் உழைப்பு அதிகமாகவும், ஊதியம் குறைவாகவும் உள்ளது. சங்குகள் வரத்து குறைவால் சங்கு தொழில் நலிவடைந்து வருகிறது. கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம், வேதாளை, ராமேசுவரம், பெரியபட்டினம் கடற்கரை பகுதியில் சங்கு சேகரிக்கும் பணியில் 300க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

ஓங்கி ஒலிக்கும் அலைகளுக்கு மத்தியில் அதிகாலை 5 மணிக்கு சென்றால் மாலை 4 மணிக்கு கரை திரும்புகின்றனர். காலில் மாட்டிக்கொண்டு நீந்தும் வகையில் வட்டவடிவமான தட்டு, இடுப்பில் அரைச்சா எனப்படும் பிளாஸ்டிக் தொட்டி, தெளிவாக பார்க்க கூண்டுக்கண்ணாடி அணிந்து தொழில் செய்து வருகின்றனர்.

ராமேசுவரம் முதல் திருச்செந்தூர் வரை சங்கு குளிக்கும் தொழிலை நம்பி பல குடும்பங்கள் உள்ளன. கடல் சீதோஷ்ண நிலை (புயல், கனமழை, பேரலை) சரியாக இருந்தால் வருடத்தில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் மட்டுமே சங்குகளை சேகரிக்க இயலும். செல்வதற்கு தடை செய்யப்பட்ட தீவுகளில் சென்று தங்கவோ, உலர்த்துவது கிடையாது.

15 பேர் கொண்ட குழுவாக நாட்டுப்படகு மூலம் தேவையான உபகரணங்களுடன் செனறு 60 முதல் 80 அடி ஆழமுள்ள கடலில் இறங்கி யானை முள்ளி, சோவி, விரிஞ்சான், நத்தை இவைகளை சேகரித்து வருகின்றனர். மன தைரியத்தில் அனுமானமாகவும், இதய துடிப்பை வைத்தும் மேலே வருகின்றனர். சங்கின் தரத்திற்கேற்ப விலை கிடைக்கிறது.

கடல் புற்கள், செடி, கொடிகளுக்கு இடையே உயிருள்ள சங்குகள் வசிப்பிடமாக கொண்டிருக்கும். சங்கின் மேல் தலை வைத்து படுத்திருக்கும் பொடித்தலை பாம்புகளை விரட்டி விட வேண்டும். ஆழ்கடலில் சுறாமீன்கள், சேவல் மீன், ஆமை கொழுப்பு படிமம், நாலு மூக்கு மீன், ஜெல்லி பிஷ் இவைகள் உடலில் பட்டால் தீ சுட்ட புண் போன்று தழும்பு ஏற்பட்டு அரிப்பினை ஏற்படுத்துகிறது.

அலங்கார கைவினைப் பொருட்களிலும், ஆன்மிக வழிபாடுகளிலும் முக்கிய பங்காற்றும் சங்குத்தொழில் தற்போது சங்கு தொழிலாளர்கள் வலியும், சோதனையும் தாங்கி தொழில் செய்து வருகின்றனர்.