கொரோனா வைரஸ் 
தமிழக செய்திகள்

2 வருடங்களுக்கு பிறகு கொரோனா நோயாளி இல்லாமல் மாறிய கோவை அரசு ஆஸ்பத்திரி

கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனிவார்டு எற்படுத்தப்பட்டது. இந்த வார்டுகளில் கடந்த 2 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மாலை மலர்

கோவை:

கோவை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. குறிப்பாக கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் ஆம்புலன்ஸ் நிற்க கூட இடம் இல்லாத வகையில் நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தனர்.

தமிழக அளவில் சென்னையை விட கோவையில் அதிகளவிலான நோயாளிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சில வாரங்கள் நோயாளிகள் அதிகம் உள்ள மாவட்டமாக தமிழகத்திலேயே முதல் இடத்திலும் கோவை மாவட்டம் நீடித்தது.மே மாதம் ஒரே நாளில் அதிகபட்சமாக 47 பேர் வரை உயிரிழந்தனர்.

இதனால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த டாக்டர்கள், நர்சுகள், எந்த நேரமும் பரபரப்புடனே காணப்பட்டனர். நோயாளிகளின் உறவினர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டபோது எல்லாம் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மன உளைச்சல் அடைந்தனர்.

இருப்பினும் சிறப்பான சிகிச்சையை கொரோனா நோயாளிகளுக்கு தொடர்ந்து அளித்து வந்தனர். இந்த நிலையில் தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது.

குறிப்பாக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து மக்களும் தடுப்பூசி செலுத்த முன்வந்தனர். இதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தினந்தோறும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இப்படி அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைய தொடங்கியது. கடந்த சில மாதங்களாக தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. தற்போது தொற்று எண்ணிக்கை 1, 2 எண்ணிக்கையிலேயே பதிவாகி வருகிறது. இது தவிர கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் கடந்த ஒரு வாரமாக 10க்கும் கீழ் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஒரு கொரோனா நோயாளிகள் கூட சிகிச்சையில் இல்லை. அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது:-

கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனிவார்டு எற்படுத்தப்பட்டது. இந்த வார்டுகளில் கடந்த 2 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது நோய் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.

சிகிச்சையில் இருந்த நோயாளிகளும், குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வார்டில் ஒரு நோயாளி கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா வார்டை மாற்றம் செய்யாமல் உள்ளோம். தினமும் 50க்கும் அதிகமான நபர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.