வழக்கு 
தமிழக செய்திகள்

கோவை மத்திய சிறையில் கைதிகள் இடையே மோதல்- 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மத்திய சிறையில் கைதிகள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கோவை:

கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறை வளாகத்துக்குள் கைதிகள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறை கைதி ஒருவர் செல்போன் பயன்படுத்தியுள்ளார். இதனை அங்கிருந்த மற்றொரு கைதியான மன்சூர் என்பவர் பார்த்து விட்டு ஜெயில் வார்டனிடம் கூறியதாக தெரிகிறது.

இது தொடர்பாக மன்சூருக்கும், மற்ற சில கைதிகளுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. நேற்று மன்சூர் முதல் பிளாக்கில் இருந்து புத்தகம் எடுப்பதற்காக வால்மேடு 3-வது பிளாக்கிற்கு சென்றார்.

அப்போது 5 கைதிகள் அவரை வழிமறித்து ‘நீ எப்படி ஜெயிலுக்கு உள்ளே செல்போன் பயன்படுத்துவதை வார்டனிடம் சொல்லலாம்’ என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி மன்சூரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். சிவக்குமார் என்பவர் கற்களால் தாக்கியதில், மன்சூருக்கு பின்தலை, நெற்றி உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.

இதை பார்த்த மற்ற கைதிகள் ஜெயில் வார்டனுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் தாக்குதலில் காயமடைந்த மன்சூர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து ஜெயில் வார்டன் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், மன்சூரை தாக்கிய கைதிகள் சிவக்குமார், அன்னபாண்டி, ஷேக் முகமத், முனியாண்டி, பிரவீன் குமார் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மோதலில் ஈடுபட்ட சிறை கைதிகள் மீது தாக்குதல், கொலைமிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறைக்குள் கைதிகள் மோதிக் கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.