தற்கொலை 
தமிழக செய்திகள்

சென்னை பள்ளி மாணவி மதுரையில் தற்கொலை- 7 பக்க கடிதம் சிக்கியது

சென்னை பள்ளி மாணவி புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் தற்கொலை செய்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குலமங்களம் பசுபதி நகரில் தனிநபர் ஒருவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த கட்டிடத்தில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி சேலையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதுகுறித்து அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.‌ இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தூக்கில் பிணமாக தொங்கிய சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அவர் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அங்கு கிடந்த செல்போனை கைப்பற்றி விசாரித்தபோது, அந்த சிறுமி சென்னை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மகன் திவ்யதர்ஷினி (வயது 15) என்பதும், 10ம் வகுப்பு மாணவி என்றும் தெரிய வந்தது.

மாணவி சாவு குறித்து சென்னையில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மதுரைக்கு வந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது மாணவி பற்றி மேலும் பல தகவல்கள் கிடைத்தன.

மாணவியின் தந்தை செந்தில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். அவருக்கு திவ்யதர்ஷினி ஒரே மகள் ஆவார். மாணவி திவ்யதர்ஷினி திருவான்மியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது பள்ளியில் பெற்றோர் கூட்டம் நடந்தது. அதற்கு தந்தை செந்தில் சென்றிருக்கிறார். அப்போது மாணவி குறைவான மதிப்பெண் பெற்று வருவதாகவும், நன்கு படிக்குமாறு அறிவுறுத்துமாறு அவரிடம் ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்பியதும் மாணவியை அவரது தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு நன்கு படிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாணவி திவ்யதர்ஷினி திடீரென மாயமானார்.

வீட்டில் இருந்து சென்ற அவர், தான் வைத்திருந்த உண்டியல் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார். மாணவியை அவரது தந்தை செந்தில் மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர்.

ஆனால் அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் மாணவி மாயமான குறித்து போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உடன் படிக்கும் தோழிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கும்போது மாணவியின் தோழிக்கு செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் மாணவி திவ்யதர்ஷினி பேசியுள்ளார்.

அப்போது அவர், தான் திருச்சியில் இருப்பதாக கூறியிருக்கிறார். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது மாணவி பேசாமல் சென்றுவிட்டார்.

மேலும் அந்த எண்ணுக்கு போலீசார் மீண்டும் தொடர்புகொண்டபோது அது ஒரு பெண் பூ வியாபாரியின் செல்போன் என்பது தெரியவந்தது.

மாணவி திருச்சியில் இருக்கும் தகவல் உறுதிப்படுத்தப்பட்டதால் அவரது குடும்பத்தினர் மற்றும் போலீசார் திருச்சி விரைந்தனர். மாணவி பேசிய செல்போனை வைத்திருந்த பூ வியாபாரியை தேடி கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது மாணவி எங்கு சென்றார் என்று அவருக்கு தெரியவில்லை. இதனால் மாணவியை தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்நிலையில்தான் மதுரை அலங்காநல்லூர் அருகே தனியார் கட்டிடத்தில் மாணவி தூக்கில் பிணமாக தொங்கியது கண்டு பிடிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் சிக்கிய செல்போன் மூலமாகவே மாணவி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரது பெற்றோர் யார்? என்பதை கண்டறிய முடிந்தது.

மேலும் சம்பவ இடத்திலிருந்து மாணவி திவ்யதர்ஷினி எழுதிய 7 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் அவர் தனது பெற்றோர், தோழிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார்.

மாணவி எழுதிய கடிதத்தில், தனக்கு நன்கு படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் என்னால் படிக்க முடியவில்லை. அதனால் எனக்கு பயமாக உள்ளது. ஆகவே நான் தற்கொலை செய்துகொள்ள வீட்டை விட்டு வெளியேறினேன்.

சென்னையில் இருந்து பஸ்ஸில் திருச்சிக்கு வந்தேன். இங்கே உள்ள கோயில்களுக்கு 2 நாட்களாக ஆட்டோவில் சென்று வந்தேன். பின்பு மதுரைக்கு வந்து விட்டேன். என்னால் படிக்க முடியாததால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த கடிதத்தின் அடிப்படையில் மாணவி திவ்யதர்சினி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இருந்த போதிலும் கடந்த சனிக்கிழமை சென்னையில் இருந்து மாயமான மாணவி, திருச்சியில் 2 நாட்கள், பின்னர் மதுரையில் திரிந்துள்ளார்.

பள்ளி மாணவியான அவர் 3 நாட்களாக தனியாக திரிந்தாரா? அல்லது அவரை யாரேனும் கடத்தி வந்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.‌

பிரேத பரிசோதனை முடிவில் அது தெரிந்துவிடும் என்பதால் பிரேத பரிசோதனை முடிவுக்காக போலீசார் காத்திருக்கின்றனர். சென்னை பள்ளி மாணவி புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்...ஜாலியன் வாலாபாக் படுகொலையில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை