ஆரல்வாய்மொழி:
பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தினத்தை யொட்டி ஆரல்வாய்மொழியில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட பிரசார பிரிவு தலைவர் ஜெயப்பிரகாஷ் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் தமிழக முதல்வர், கனிமொழி எம்.பி. குறித்து அவதூறாக பேசினார். இதுகுறித்து தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ஜெயப்பிரகாஷ் மீது இந்திய தண்டனை சட்டம் 153ஏ, 504, 505(2), 509 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து ஆரல்வாய்மொழி போலீசார் இன்று அதிகாலை இரணியலில் உள்ள ஜெயப்பிரகாஷ் வீட்டிற்கு சென்றனர். ஜெயப்பிரகாஷை கைது செய்ய அவரது வீட்டிற்கு போலீசார் வந்ததை அறிந்ததும் அவரது வீட்டிற்கு முன்னாள் பாரதிய ஜனதா மாவட்ட துணைத் தலைவர் குமரி ப.ரமேஷ் உள்பட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் குவிந்தனர். அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களிடம் தங்கள் கடமையை செய்ய ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதை தொடர்ந்து போலீசார் ஜெயப்பிரகாஷை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெயப்பிரகாஷை ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும், பாரதிய ஜனதா பொதுச்செயலாளர் சொக்கலிங்கம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து நாகர்கோவில் டி.எஸ்.பி. நவீன்குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினார்கள். ஆனால் பாரதிய ஜனதாவினர் அங்கேயே திரண்டு நின்றனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஜெயப்பிரகாஷை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸ் நிலையத்தில் இருந்து ஜீப்பில் ஏற்றிச் சென்றனர்.
அப்போது பாரதிய ஜனதா தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.