சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் நிலையம் அமைந்துள்ளது
இங்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 60க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
தற்போது கோடை வெயிலை பொதுமக்களே சமாளிக்க முடியாமல் திணறி வரும் நிலையில் பறவைகள் தண்ணீரின்றி தவித்து வருகிறது. இதனால் தாலுகா இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் காவலர்கள் சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் நிலையத்தில் பறவைகள் நீர் அருந்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
அதன்படி போலீஸ் நிலையத்தில் உள்ள 7 மரங்களில் பலகைகள் அடித்து அதில் தண்ணீர் கேன்கள் மற்றும் மண் பானை அமைத்துள்ளனர். அதில் தினமும் தண்ணீர் ஊற்றுகின்றனர்.
இதில் பறவைகள் வந்து உட்கார்ந்து தாகத்தை தணித்து செல்கின்றன. போலீசாரின் இந்த மனிதநேய செயலை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர். இது தொடர்பான வீடியோ, புகைப்படம் ஆகியவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து போலீசாரை பாராட்டி வருகின்றனர்.