விபத்து 
தமிழக செய்திகள்

அவினாசி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 2 பேர் பலி

அவினாசி அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற இரண்டு பேர் அதே திசையில் சென்ற லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

மாலை மலர்

அவிநாசி:

பீகார் மாநிலத்தை சேர்ந்த ராம்குமார் மகன் மித்திலேஸ் (வயது 22). புலான்ரிக் என்பவரது மகன் புபேந்திரா (23). இவர்கள் 2 பேரும் அவினாசி அருகே உள்ள நம்பியாம்பாளையம் பகுதியில் தங்கி வேட்டுவபாளையத்தில் உள்ள ஒரு அரிசி ஆலையில் வேலை பார்த்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்றிரவு 2பேரும் மோட்டார் சைக்கிளில் நம்பியாம்பாளையத்தில் இருந்து அவினாசி நோக்கி வந்து கொண்டிருந்தனர். சுண்டக்காம்பாளையம் அருகே வந்த போது அதே திசையில் சென்று கொண்டிருந்த லாரியின் பக்கவாட்டில் மோட்டார் சைக்கிள் மோதியதில் நிலைகுலைந்து இருவரும் கீழே விழுந்தனர்.

அப்போது லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மித்திலேஸ், புபேந்திரா ஆகிய 2பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.