மதுரை:
மதுரை சிலைமான் கல்மேடு பகுதியை சேர்ந்தவர் அழகம்மாள் (வயது 40). இவர் இன்று காலை மகள் கவுசல்யாவுடன் (வயது 22) மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நின்றிருந்த அழகம்மாள் தான் மறைத்து வைத்து கொண்டு வந்திருந்த மண் எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு போலீசார் விரைந்து செயல்பட்டு அழகம்மாளை தடுத்து அவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவரை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அழகம்மாள் கூறுகையில், எனது மகள் கவுசல்யாவுக்கு மணிகண்டன் என்பவருடன் திருமணமாகி 6 மாதங்களே ஆகின்றன. மணிகண்டன் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு எங்களை கொடுமை படுத்துகின்றனர். இது தொடர்பாக நான் மதுரை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தேன். போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்து கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றேன்” என்று தெரிவித்தார்.
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா பரவல் காரணமாக மனுநீதி நாள் முகாம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.