வழக்கு பதிவு 
தமிழக செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்து பற்றி அவதூறு கருத்து- கோவை வாலிபர் மீது 3 பிரிவுகளில் வழக்கு

பேஸ்புக் தளத்தில் முப்படை தலைமை தளபதி இறந்தது குறித்து, அநாகரீகமான முறையில் பிரதமர் மோடியை அதனுடன் தொடர்புபடுத்தி செய்தி மற்றும் கார்ட்டூன் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கோவை:

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த 8-ந்தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணித்த முப்படைத்தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

குரூப் கேப்டன் வருண்சிங் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு பெங்களூருவில் உள்ள விமானப்படை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் ஒரு வார காலத்திற்கு பின் குரூப் கேப்டன் வருண் சிங் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேருமே இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக ஏர்மார்‌ஷல் மன்வேந்திரசிங் தலைமையிலான விசாரணை குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே ஹெலிகாப்டர் விபத்து குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வந்தன. இதையடுத்து இந்திய விமானப்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், விரைவில் உண்மைகள் வெளியிடப்படும் என்றும், அதுவரை உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் கண்ணியத்தை கருத்தில் கொண்டு யூகங்களை தவிர்க்க வேண்டும் என கூறியிருந்தது.

மேலும் இது தொடர்பாக தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக போலீசாரும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் கோவையை சேர்ந்த நான் தான் கோவை பாலா என்ற பேஸ்புக் தளத்தில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பேஸ்புக் தளத்தில் முப்படை தலைமை தளபதி இறந்தது குறித்து, அநாகரீகமான முறையில் பிரதமர் மோடியை அதனுடன் தொடர்புபடுத்தி செய்தி மற்றும் கார்ட்டூன் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தகவலானது தற்போது பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.

இந்த கருத்துக்கு பா.ஜனதா மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பதில் வாசகங்களையும் பதிவிட்டுள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களை தெரிவித்த நான் தான் பாலா என்ற பேஸ்புக் கணக்கிற்கு சொந்தக்காரரான கோவை பாலன்(40) மீது சரவணம்பட்டி போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். சாதி, மதம், இனம் மொழி சம்பந்தமாக விரோத உணர்ச்சிகளை தூண்டிவிடுதல், அமைதியைக் குலைக்க தூண்டும் வகையிலும் மற்றும் இருவேறு வகுப்புகளுக்கிடையே தீய எண்ணத்தை உருவாக்கும் உரைகளை வெளியிட்டது என 3 பிரிவில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இது தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT