தமிழக செய்திகள்

வில்லுப்பாட்டு கலை பாடமாகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

கர்நாடக இசைக்கும் நாட்டுப்புற இசைக்கும் வேற்றுமை உள்ளது. கோவில்களில் வில்லுப்பாட்டு என்பது முக்கியமாக இடம்பெறுகிறது.

சென்னை:

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா கடந்த 21-ந் தேதி சென்னையில் நடைபெற்றது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டங்கள் வழங்கி பேசியபோது, 'இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கர்நாடக இசைக் கலைஞரும், சமூக செயற்பாட்டாளருமான டி.எம். கிருஷ்ணா கலந்துகொண்டு பேசும்போது, கர்நாடக இசைக்கும் நாட்டுப்புற இசைக்கும் வேற்றுமை உள்ளது. இதை முதலில் மாற்ற வேண்டும். பரதநாட்டியம் எந்த அளவு முக்கியம் என்றால் அதே போல் கூத்து முக்கியம்.

நாட்டுப்புற பாடல்கள் முக்கியம். இவற்றை இந்த பல்கலைக் கழகத்தில் கொண்டு வந்து பட்டப்படிப்பாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் வலைதளத்தில் பதில் அளித்துள்ளார்.

அதில் வில்லுப்பாட்டு, கிராமிய பாடல்கள் உள்ளிட்ட இத்தகைய இசையை கற்றுத் தருவதற்கான பாடத் திட்டங்களை இந்த பல்கைலக்கழகத்தில் தொடங்குவது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் கூறுகையில், 'வில்லுப்பாட்டு மற்றும் நாட்டுப்புற இசை பாட பிரிவுகளில் துவங்க அரசு ரூ.45 லட்சம் ஒதுக்கி உள்ளது என்றும் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 20 மாணவர்கள் வீதம் சேர்க்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழகத்தில் பட்டயப்படிப்பாக இவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். வில்லுப்பாட்டு, கூத்து போன்ற நாட்டுப்புற கலைகளில் ஈடுபடும் கலைஞர்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகம் உள்ளனர். அங்குள்ள கோவில்களில் வில்லுப்பாட்டு என்பது முக்கியமாக இடம்பெறுகிறது.

அழியும் நிலையில் உள்ள இந்த கலைகளுக்கு மீண்டும் புத்துணர்வு கொடுக்கும் வகையில் வில்லுப்பாட்டு போன்ற நாட்டுப்புற பாடல்களை பாடமாக கொண்டு வருவதை வரவேற்பதாக நாட்டுப்புற கலைஞர் பெருமாள் கூறி உள்ளார்.

SCROLL FOR NEXT