அம்மன் அர்ச்சுணன் 
தமிழக செய்திகள்

எந்த சோதனைக்கும் அ.தி.மு.க. அஞ்சாது- அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ. பேட்டி

அ.தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என நினைப்பவர்களே வீழ்ந்து போவார்கள் என்று அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ. கூறினார்.

மாலை மலர்

கோவை:

கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது.

சோதனை நடைபெற்றதை அடுத்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டிற்கு அம்மன் அர்ச்சுணன் வந்தார். அவர் உள்ளே சென்று பார்த்து விட்டு பின்னர் வெளியில் வந்தார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க தான் வெற்றி பெற்றது. அதனை மாற்றி விட்டனர். இந்த பிரச்சினையை மறைப்பதற்காகவே லஞ்ச ஒழிப்பு துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையின் மிகப்பெரிய சக்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி என்பது தற்போதுள்ள அமைச்சர்களுக்கும் தெரியும். அந்த பிம்பத்தினை உடைப்பதற்காக இதுபோன்று லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவிவிட்டு சோதனை நடத்தி வருகிறார்கள்.

சாதாரண தொண்டர்கள் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்கின்றனர். இதனால் அ.தி.மு.க.வினர் பயந்து விடுவார்கள் என நினைக்கின்றனர். ஆனால் நாங்கள் எந்த சோதனைக்கு பயப்படமாட்டோம். வீழ்ந்து விடவும் மாட்டோம். அ.தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என நினைப்பவர்களே வீழ்ந்து போவார்கள்

இவ்வாறு அவர் கூறினார்.

வால்பாறை எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி கூறுகையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் மிகப்பெரிய வெற்றி அடைவோம். கோவை அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம். இதுபோன்ற சோதனைகளுக்கு நாங்கள் பயந்து விடமாட்டோம். எவ்வளவு வழக்குகள் வந்தாலும் அதனை சந்திக்க தயாராக உள்ளோம் என்றார்.